பெருநாள் கொண்டாட்டம்: நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க பொதுமக்களுக்கு லுவாஸ் முக்கிய அறிவுறுத்தல்

20 மார்ச் 2026, 4:56 AM
பெருநாள் கொண்டாட்டம்: நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க பொதுமக்களுக்கு லுவாஸ் முக்கிய அறிவுறுத்தல்

ஷா ஆலம், மார்ச் 20 – ஹரிராயா ஐடில்பித்ரி பெருநாளை முன்னிட்டு இல்லங்களில் 'திறந்த இல்ல உபசரிப்புகளை' ஏற்பாடு செய்யும் பொதுமக்கள், முறையான கழிவு மேலாண்மை வழிகாட்டிகளைப் பின்பற்றுமாறு சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) அறிவுறுத்தியுள்ளது.

பெருநாள் காலத்தில் தடையற்ற நீர் விநியோகத்தை உறுதி செய்யவும், நீர் ஆதாரங்கள் மாசுபடுவதைத் தவிர்க்கவும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த வாரியம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், திரவ அல்லது திடக் கழிவுகளை அகற்றும் போது பொதுமக்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, உணவுக் கழிவுகள் மற்றும் இதர குப்பைகளை முறையாகச் சேகரித்து, உள்ளூர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் மட்டுமே வீச வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் குப்பைகளையோ அல்லது எஞ்சிய உணவுகளையோ ஆறுகளில் கொட்டக்கூடாது; அத்தகைய செயல்கள் ஆற்று நீரை மாசுபடுத்தி, ஒட்டுமொத்த நீர் விநியோகத் தடங்கலுக்கு வழிவகுக்கும் என்று லுவாஸ் எச்சரித்துள்ளது.

அதே வேளையில், சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட பழைய எண்ணெய் வகைகளை சமையலறை சிங்க் (Sink) அல்லது வடிகால்களில் ஊற்ற வேண்டாம் என்றும், அவற்றை முறையாகச் சேகரித்து மறுசுழற்சி மையங்களில் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கழிவு மேலாண்மையில் காட்டப்படும் சிறு அலட்சியம் கூட, பொதுமக்களின் நீர் தேவையைப் பாதிக்கும் பெரும் சிக்கலாக மாறக்கூடும் என்பதை அந்த வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, மாநிலத்தின் முக்கிய நீர் ஆதாரங்களான சிலாங்கூர் ஆறு மற்றும் லங்காட் ஆற்றுப் படுகைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க 'நீர் உயரடுக்கு படை' (Skuad Elit Air) களமிறக்கப்பட்டுள்ளதாக உள்கட்டமைப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

முக்கிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மேற்பகுதிகளில் உள்ள 14 இடர்மிக்க இடங்களில், ஒரு நாளைக்கு ஒன்பது முறை ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை நீர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு, ஏதேனும் மாசு ஏற்பட்டால் உடனடியாகக் கட்டுப்படுத்தவும், நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு பாதிக்கப்படாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.