ஷா ஆலம், மே 21 – பெராணங், சுங்கை காபூல் (Sungai Kabul) ஆற்றில் ஏற்பட்ட நீர் மாசடைவைத் தூய்மைப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. ஆற்றின் நிலைமை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது, முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மஹ்கோத்தா பெராணங் (Mahkota Beranang) தொழில்பேட்டைப் பகுதியில் கடந்த மே 17ஆம் தேதி நிறம், துர்நாற்றம் மற்றும் நுரையுடன் கூடிய நீர் வெளியேறியதைத் தொடர்ந்து, மாசடைந்த நீரை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள் இன்று மதியம் 1 மணிக்கு முடிவடைந்ததாக சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) தெரிவித்துள்ளது.
"பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் ஆலை ஒன்றின் நீர் சுத்திகரிப்புக் குளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, கழிவுநீர் வடிகால் அமைப்பில் நிரம்பி வழிந்து சுங்கை காபூல் ஆற்றில் கலந்ததே இந்த மாசடைவுக்குக் காரணம் என நம்பப்படுகிறது," என்று அந்த வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையின் படி, ஆலை நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட குத்தகையாளரின் 8 மற்றும் 40 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு டேங்கர் லாரிகளைப் பயன்படுத்தி, அந்த ஆலையின் ஆறு சுத்திகரிப்புக் குளங்களில் இருந்த சுமார் 48 கன மீட்டர் அளவிலான கழிவுகள் முழுமையாக உறிஞ்சி அகற்றப்பட்டுள்ளன.
மேலும், சுங்கை காபூல் பகுதியில் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக சுமார் 125 கிலோகிராம் ஆக்டிவேட்டட் கார்பன் (activated carbon) பயன்படுத்தப் பட்டுள்ளதாக லுவாஸ் (LUAS) கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், அங்கு எவ்வித மாசும் கண்டறியப்படவில்லை. அதேவேளையில் சுங்கை காபூல், சுங்கை செமினி (Sungai Semenyih) நதி மற்றும் சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் (LRA) ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பிலும் அசாதாரண துர்நாற்றம் ஏதும் வீசவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
"மூல நீர் உத்தரவாத அமைப்பு (SJAM) செயல்பாடுகள் நேற்று மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது சுங்கை செமினி ஆற்றிலிருந்து மூல நீரைப் பெற்று வழக்கம் போல் செயல் படத் தொடங்கியுள்ளது," என்று லுவாஸ் மேலும் விளக்கியது.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீர் ஆதாரங்களை மாசுபடுத்திய குற்றத்திற்காக 1999 ஆம் ஆண்டு லுவாஸ் (LUAS) சட்டத்தின் 79(4) பிரிவின் கீழ் வாரியம் விசாரணை அறிக்கை ஒன்றைத் திறந்துள்ளது.
நீர் ஆதாரங்கள் மாசடைவதைத் தடுக்கவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் தங்களது தரப்பு களத்தில் தொடர்ந்து முழுத் தயார் நிலையில் இருக்கும் என லுவாஸ் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளையில், காஜாங் நகராண்மைக் கழகம் (MPKj) சம்பந்தப்பட்ட ஆலைக்கு அபராதம் விதித்ததோடு, அதன் செயல்பாட்டு உரிமத்தை ரத்து செய்து சீல் வைத்துள்ளது. மேலும், சுற்றுச்சூழல் துறை (JAS), 1974ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் கீழ் அந்த ஆலையின் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைப் பறிமுதல் செய்துள்ளது.
சுங்கை காபூல் நதி மாசடைவு: தூய்மைப்படுத்தும் பணி நிறைவு, மறுசுழற்சி ஆலைக்கு சீல்
21 மே 2026, 1:41 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பெருநாள் கொண்டாட்டம்: நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க பொதுமக்களுக்கு லுவாஸ் முக்கிய அறிவுறுத்தல்
Shalini Rajamogun
20 மார்ச் 2026

selangor
சிலாங்கூரில் இடை விடாது நீர் வழங்க நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணியில் அதிகம் கவனம்.
Pakiya
22 ஆகஸ்ட் 2025

---
Yunus: Selangor kecam dakwaan NST, laporan LUAS berbeza
admin
14 மே 2014
---
LUAS: Kajian Jabatan Kimia air lombong selamat
admin
14 மே 2014
உங்கள் கருத்து என்ன?




