ஷா ஆலாம், செப் 22 - இன்று காலையில், மயக்கமடைந்த பயணி ஒருவர் , வங்சா மாஜு எல்.ஆர்.டி நிலைய தண்டவாளப் பகுதியில் விழுந்தார். இதனால் கிளானா ஜெயா எல்.ஆர்.டி வழித்தடச் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.
அதிகாலை மணி 6.52 -க்கு நிகழ்ந்த அச்சம்பவத்தை அடுத்து, ஊடுருவல் அவசர நிறுத்த முறை உடனடியாக முடுக்கி விடப்பட்டது. பாதுகாப்பு கருதி தண்டவாளத்துக்கான மின்சக்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என ராபிட் கே.எல் நிறுவனம் தெரிவித்தது.
நிலையப் பணியாளர்கள், தண்டவாளத்தில் இருந்து பயணியைக் காப்பாற்றியதுடன், அவசர அறைக்கு கொண்டுச் சென்று தொடக்க சிகிச்சையை அளித்தனர்.
உடல் நிலை சரியில்லாத அல்லது உதவித் தேவைப்படும் பயணிகள், நிலையத்தில் பணியில் இருக்கும் துணைப் போலீஸ் அதிகாரிகள் அல்லது நிலையப் பணியாளர்களின் உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதோடு, பயணிகள் ரயிலுக்காக காத்திருக்கும்போது மஞ்சள் நிற கோட்டுக்குப் பின்னால் நிற்குமாறு ராபிட் கே.எல் நினைவூட்டியது.







