தீபாவளி சந்தை: கட்டணம் 400 ரிங்கிட்டாகக் குறைப்பு - அமைச்சர் ஹன்னா யோ

21 செப்டெம்பர் 2026, 9:58 AM
தீபாவளி சந்தை: கட்டணம் 400 ரிங்கிட்டாகக் குறைப்பு - அமைச்சர் ஹன்னா யோ

புத்ராஜெயா, செப். 21 — கோலாலம்பூரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தீபாவளி சந்தை வியாபாரிகள் செலுத்த வேண்டிய கட்டணம் 85 விழுக்காடு குறைக்கப்பட்டு, அதிகபட்சமாக 400 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகளின் வர்த்தகச் செலவைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 400 ரிங்கிட் கட்டணத்தில் உரிமக் கட்டணம் 30 ரிங்கிட், சேவைக் கட்டணம் 150 ரிங்கிட், கடைத் தள வாடகை 150 ரிங்கிட் மற்றும் வைப்புத்தொகை 70 ரிங்கிட் ஆகியவை அடங்குகின்றன.

கடந்த ஆண்டு தீபாவளி சந்தை வியாபாரிகள் மொத்தம் 2,626 ரிங்கிட் வரை செலுத்த வேண்டியிருந்தது. அதில் 21 ரிங்கிட் உரிமக் கட்டணம், 105 ரிங்கிட் சேவைக் கட்டணம், 500 ரிங்கிட் கடைத் தள வாடகை மற்றும் 2,000 ரிங்கிட் வைப்புத்தொகை ஆகியவை அடங்கியிருந்தன.

பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் ரமலான் சந்தைக்கு விதிக்கப்படும் கட்டணத்துக்கு இணையானது என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு 21 நாட்களாக இருந்த தீபாவளி சந்தை செயல்பாட்டு காலம் இம்முறை 30 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு சந்தைக்கான வர்த்தகத் தளங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தீபாவளி சந்தையில் பங்கேற்க விரும்புவோர், இடைத்தரகர்களை நாடாமல் கோலாலம்பூர் மாநகர மன்றமான டிபிகேஎல்-லை நேரடியாகத் தொடர்புகொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற 2026 தீபாவளி சந்தை தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் ஹன்னா இயோ இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளி சந்தை அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இம்முறை இரண்டு முக்கிய இடங்களில் சந்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவை துன் சம்பந்தன் வளாகத்தின் வாகன நிறுத்துமிடம் மற்றும் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள ஜாலான் புனுஸ் 6 ஆகும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.