மோசமான மனநலப் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்தில் 55,169 அரசு ஊழியர்கள்: பொது சேவைத் துறை தகவல்

21 செப்டெம்பர் 2026, 9:23 AM
மோசமான மனநலப் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்தில் 55,169 அரசு ஊழியர்கள்: பொது சேவைத் துறை தகவல்

ஷா ஆலாம், செப். 21 — 55,169 அரசு ஊழியர்கள், மனநலப் பிரச்சனைகள் மற்றும் தற்கொலை எண்ணம் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள நிலைகளில் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை உளவியல் சுகாதாரத்திற்கான டிஜிட்டல் சுயவிவர முறை (MyPsyD) மூலம் பரிசோதனை செய்து அடையாளம் கண்டதாகப் பொது சேவைத் துறையின் துணை தலைமை இயக்குநர் (மேம்பாடு) டத்தோ டாக்டர் முகமட் பகாரி இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை, அரசு ஊழியர்களிடையே உளவியல் நலனை முழுமையாக வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.

மேலும், ஊழியர்களின் உளவியல் நலன் என்பது ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த நலனையும் பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். அதன் தாக்கம் மக்களுக்கு வழங்கப்படும் அரசுச் சேவைகளின் தரத்திலும் பிரதிபலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, 2025ஆம் ஆண்டுக்கான மலேசிய உளவியல் நலக் குறியீட்டு ஆய்வின் முடிவுகளும், ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க பணிச்சூழலை உருவாக்குவதில் உளவியல் நலன் முக்கியப் பங்கு வகிப்பதை வெளிப்படுத்துவதாக முகமட் பகாரி தெரிவித்தார்.

அரசு ஊழியர்களிடையே நிலவும் மனநலப் பிரச்சனைகளை எதிர்கொள்ள ஆரம்பகட்ட தலையீட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

MyPsyD ஆய்வின் அடிப்படையில், 40,000க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் எதிர்மறையான நடத்தைகளில் ஈடுபடும் சாத்தியம் கொண்டவர்களாக உள்ளனர்.

அதில் தற்கொலைக்கு முயற்சிக்கும் போக்கும் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

ஆபத்து இருப்பதாக அடையாளம் காணப்படும் ஊழியர்களுக்கு ஆரம்பகட்ட தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, துறைத் தலைவர்கள் உளவியல் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்குப் பல்வேறு உளவியல்-சமூக ஆதரவுகளை அரசாங்கம் வழங்கி வருவதாகவும் முகமட் பகாரி தெரிவித்தார்.

இதில் நிதி உதவி மற்றும் பயிற்சிகள் மட்டுமின்றி, பொதுச் சேவை ஊதிய முறை (SSPA) மூலம் சேவைத் திட்டங்கள், சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் அடங்கும் என்றார்.

அதேவேளை, பணிக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் சிறந்த சமநிலையை ஏற்படுத்தும் நோக்கில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த கலப்புப் பணிநாள் கொள்கை (HBH) மூலம் நெகிழ்வான பணிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உளவியல் அதிகாரிகளின் திறன் மற்றும் தொழில்முறை தரத்தை உயர்த்தும் வகையில், ஆண்டுதோறும் தாக்கமிக்க தொழில்முறைச் சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

படிப்படியாக அனைத்து உளவியல் அதிகாரிகளும் குறைந்தபட்சம் முதுகலைப் பட்டத் தகுதியைப் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.