ஷா ஆலம், செப். 21 — சிலாங்கூரில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சமமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்வதற்குப் பதிலாக, மக்கள்தொகைக்கு ஏற்ப நிதி வழங்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
இதனை பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷிட் ஹரூன் வலியுறுத்தியுள்ளார்.
சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டம் 2027 தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, இந்த நிதி ஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

குறிப்பாக அதிக மக்கள் தொகையைக் கொண்ட சட்டமன்றத் தொகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப நிதி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் தேவைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனவே, அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே அளவிலான நிதியை வழங்குவது பொருத்தமானதாக இருக்காது என அவர் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வாக்குரிமை மற்றும் புதிய குடியிருப்புத் திட்டங்களின் வளர்ச்சி ஆகியவற்றால் தொகுதிகளில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் கூடுதல் தேவைகளையும் கருத்தில் கொண்டு இந்த முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பத்து தீகாவை உதாரணமாகக் குறிப்பிட்ட டேனியல், அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ள அந்தத் தொகுதியில் சுமார் 3 லட்சம் பேர் வசிப்பதாக மதிப்பிடப்படுவதாகத் தெரிவித்தார்.
இதன் காரணமாக பல்வேறு உதவிகள் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அதற்கேற்ப தொகுதி அலுவலகத்துக்கு நிதித் தேவையும் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களைப் பெறுவதால், அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது சாத்தியமாகாமல் போவதாகவும், நிதி வரம்புகள் காரணமாக சில விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் டேனியல் தெரிவித்தார்.
எனவே, ஒவ்வொரு தொகுதியின் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கீட்டு முறையை மேலும் மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் தொகுதியின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப உதவிகளையும் மாநில அரசின் திட்டங்களையும் செயல்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.







