புத்ராஜெயா, செப். 21 — சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வரும் சரிபார்க்கப்படாத தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் துரித வளர்ச்சி, நாட்டின் அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதில் மிகப் பெரிய சவால்களாக உருவெடுத்துள்ளன.
இதனை மலேசிய புள்ளிவிவரத் துறையின் (DOSM) தலைமை நிபுணர் சித்தி ஆசியா அகமட் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் வேகமாக மாற்றமடைந்து வரும் சூழலில் மலேசிய புள்ளிவிவரத் துறை மேலும் சுறுசுறுப்புடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சில தரப்பினர் தாங்கள் வெளியிடும் குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் மலேசிய புள்ளிவிவரத் துறையிலிருந்து பெறப்பட்டவை எனக் கூறும் நிலை இருப்பது கவலைக்குரியதாகும்.
உண்மையில், அந்தத் தரவுகள் அத்துறை வெளியிடப்படாதவையாக இருந்தாலும், அவை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் போன்று பொதுமக்களிடம் பரப்பப்படுவதாக சித்தி ஆசியா சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களின் வாயிலாகவும் துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் மூலம் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதையும் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு மற்றும் பணிச்சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக புள்ளிவிவரத் துறை மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற துறைகளில் AI பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
அதேவேளையில், AI தொழில்நுட்பம் அதிக வேகத்திலும் மேலும் விரிவான முறையிலும் புள்ளிவிவரங்களை உருவாக்குவதற்கு உதவக்கூடும் என்றும் சித்தி ஆசியா குறிப்பிட்டார்.
இதனிடையே, AI உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு புள்ளிவிவரத் துறை பணியாளர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அவசியமாகும்.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் தரவுகளின் காலகட்டத்தில், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதுடன், தரவுகளைப் புரிந்துகொண்டு பயன்படுத்தும் திறனை பொதுமக்களிடையே அதிகரிப்பதும் புள்ளிவிவரத் துறையின் முக்கியப் பொறுப்பாக தொடர்ந்து இருக்கும் என சித்தி ஆசியா தெரிவித்தார்.







