ஈப்போ, செப் 19 - இங்குள்ள ஜாலான் ஜெலாபாங்-அம்பாங் (Jalan Jelapang-Ampang) சாலையில், 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட பயங்கர விபத்தில் மூன்று மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழந்தனர்;
மேலும் 9 பேர் காயமடைந்தனர் என ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் நஜிப் ஹம்சா தெரிவித்தார்.
அதிகாலை 3.35 மணியளவில் இந்த விபத்து குறித்து பொது மக்கள் போலிசுக்கு தகவல் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான அனைத்து வாகனங்களும் மேருவிலிருந்து தம்புன் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது.
"19 மற்றும் 20 வயதுடைய இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 19 வயதுடைய மற்றொரு இளைஞர் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காயமடைந்த 19 முதல் 25 வயதுக்குட்பட்ட மற்ற 9 மோட்டார்சைக்கிளோட்டிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்," என்று நஜிப் ஹம்சா ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விபத்தில் மூன்று கார்களின் ஓட்டுநர்களும் எந்தவொரு காயமுமின்றி உயிர் தப்பினர்.
ஆபத்தான அல்லது அலட்சியமாக வாகனம் ஓட்டியதற்காக, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் போலிஸ் இந்த விபத்தை விசாரிக்கின்றனர்.







