ஷா ஆலாம், செப் 14- மின்சார ஆற்றல் மற்றும் அதற்கான உட்கட்டமைப்பின் தயார்நிலை ஆகியவற்றின் அடிப்படையிலே புதிய தரவு மைய முதலீடுகளை, சிலாங்கூர் மாநில அரசு மதிப்பீடு செய்கிறது.
வீடு மற்றும் தொழில் துறைகளுக்கான மின்சார விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அந்த மதிப்பீடு அவசியமாகிறது என முதலீடு, வர்த்தக, நடமாட்டத்திற்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
சிலாங்கூர் தொடர்ந்து தரவு மைய முதலீடுகளை ஈர்த்து வருகின்றது.
" மின்சார ஆற்றலையும் அதன் விநியோகத்தையும் எரிசக்தி ஆணையம், மற்றும் தெனாகா நேஷனல் (TNB) நிறுவனம் வாயிலாக, கூட்டரசு அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது.
இந்நிலையில், தரவு மைய முதலீடுகள் முறையாக மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வது சிலாங்கூரின் பங்காகும்," என மீடியா சிலாங்கூர் தொடர்பு கொண்டபோது இங் ஸீ ஹான் கூறினார்.
நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் , தரவு மையங்களின் மின்சாரப் பயன்பாடு உயர்ந்திருப்பது குறித்த கவலையும் தற்போது எழுந்துள்ளது.
இவ்வாண்டு இதுவரை சராசரி ஏழு விழுக்காடாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த மின் பயன்பாட்டில் , ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில், தரவு மையங்களின் மின் பயன்பாடு 9.3 விழுக்காடு அதிகரித்ததாக, கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி, எரிசக்தி ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிட்டி சபினா சாலே தெரிவித்திருந்தார்.
அது குறித்து கருத்துரைத்த இங் ஸீ ஹான், தரவு மையங்கள் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி பயன்பாட்டை அதிகம் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுவதாகக் கூறினார்.
குறிப்பாக சூரிய மின்சக்தியைப் பயன்படுத்துமாறும் கூட்டரசின் பசுமை திட்டங்களில் பங்கேற்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளன. அதோடு, குளிரூட்டும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுவதாக இங் மேலும் குறிப்பிட்டார்.






