மலேசியாவின் முதல் கூகுள் தரவு மையம் இன்னும் 9 மாதங்களில் செயல்படும்

20 ஆகஸ்ட் 2026, 5:35 AM
மலேசியாவின் முதல்  கூகுள் தரவு மையம் இன்னும் 9 மாதங்களில் செயல்படும்
மலேசியாவின் முதல்  கூகுள் தரவு மையம் இன்னும் 9 மாதங்களில் செயல்படும்
மலேசியாவின் முதல்  கூகுள் தரவு மையம் இன்னும் 9 மாதங்களில் செயல்படும்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - கூகுள் நிறுவனத்தின் மலேசியாவிற்கான முதல் தரவு மையம் (Data Centre) இன்னும் ஒன்பது மாதங்களில் செயல்படத் தொடங்கும்.

சைம் டார்பி பிராபர்ட்டி நிறுவனத்திற்குச் ( Sime Darby Property Bhd ) சொந்தமான, சிலாங்கூர் எல்மினா வர்த்தகப் பூங்காவில் (Elmina Business Park) இந்த தரவு மையம் செயல்படவுள்ளது.

அம்மையத்துக்கான மேம்பாடுகள் திட்டமிட்டப்படி நடைபெற்று வருவதாக கூகுள் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டாரத்தின் உலகளாவிய உட்கட்டமைப்புக்கான முதன்மை அதிகாரி கென் சியா (Ken Siah) தெரிவித்தார்.

"மேம்பாட்டுப் பணிகள் சுமூகமாக நடந்து வருகின்றன. கட்டுமானமும் சீராக உள்ளது. உள்ளூர் சமூகம் மற்றும் உள்ளூர் அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது," என்று மெனாரா ஆக்சியாத்தாவில் உள்ள கூகுள் மலேசியா தலைமையகத்தில் மீடியா சிலாங்கூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில், அவர் குறிப்பிட்டார்.

கூகுள் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டாரத்தின் உலகளாவிய உட்கட்டமைப்புக்கான முதன்மை அதிகாரி கென் சியா ; படம் - மீடியா சிலாங்கூர்

2024-இல், கூகுள் நிறுவனம் மலேசியாவில் 813 கோடி ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டை அறிவித்தது.

இதில் கூகுளின் முதல் தரவு மையம் மற்றும் கூகுள் கிளவுட் (Google Cloud) வட்டாரத்தின் மேம்பாடும் அடங்கும். இது இந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் மலேசியாவிற்கான மிகப்பெரிய முதலீடாகும்.

எல்மினா திட்டம் உட்பட கூகுளின் இந்த முதலீடு, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, உள்ளூர் மக்களுக்கு பரந்த பொருளாதார நன்மைகளையும் கொண்டு சேர்க்கும்.

எல்மினா திட்டத்தின் மூலம் மட்டும் சுமார் 4,200 வேலை வாய்ப்புகள் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, மிக பிரம்மாண்டமான அளவில் தரவுகளைக் கையாள்வதோடு, கணினி கட்டமைப்பை மிக வேகமாக விரிவுபடுத்தும் 'ஹைப்பர்ஸ்கேல்' (Hyperscale) தரவு மையங்களை உருவாக்குவதில், உள்ளூர் நிறுவனங்கள் தங்களின் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ளவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்.

மேலும், இந்த மேம்பாட்டுத் திட்டம் உள்ளூர் வணிக அமைப்புகளுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் பொருளாதார ரீதியாகப் பயனளிக்கும் என்றும் அவர் விளக்கினார்.

"எங்கள் தரவு மையத்திற்குள் நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு வேலைக்கும், அது வெளியில் உள்ள பிற ஒன்பது வேலைகளை ஆதரிக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

ஒப்பந்ததாரர்கள், வடிவமைப்பு ஆலோசகர்கள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், உபகரண வழங்குநர்கள், சட்ட நிறுவனங்கள், பராமரிப்பு வழங்குநர்கள் மற்றும் கழிவு நிர்வகிப்பு நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

"தரவு மையம் செயல்படும் வரை இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் தொடரும் என்பதால், இவை நீண்ட கால வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன," என்று சியா கூறினார்.

தரவு மையங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே பணிபுரிவார்கள் என்ற கருத்தை மறுத்த அவர், கூகுள் நிறுவனம் நூற்றுக்கணக்கான திறமையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் என்று வலியுறுத்தினார்.

தொழில்நுட்ப வல்லுநர்கள், இணைய பொறியாளர்கள், இயந்திரவியல் பொறியாளர்கள், மின் பொறியாளர்கள், விநியோகத் தொடர் மற்றும் தளவாட மேலாளர்கள், ஆற்றல் நிபுணர்கள் மற்றும் சமூக விவகார மேலாளர்கள் ஆகியோர் இந்த வேலைகளில் அடங்குவர்.

கூகுள் தற்போது மலேசியாவில் உள்ள தனது தரவு மையத்திற்கான ஆட்சேர்ப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. எனினும், வேலை வாய்ப்புக்கான எண்ணிக்கையை சியா வெளியிடவில்லை.

கூகுளின் ஹைப்பர்ஸ்கேல் வசதிகள் நிறுவனத்தின் சொந்த செயல்பாடுகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால், புதிய ஊழியர்களுக்கு தீவிரப் பயிற்சிகள் வழங்கப்படும்.

தரவு மையங்களுடன் அடிக்கடி தொடர்புபடுத்தப்படும் ஒலி மாசு பற்றிய கவலைகளுக்குப் பதிலளித்த சியா, கூகுள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தொலைவில் உள்ள இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அதோடு வழக்கமான ஒலி அளவைச் சோதித்து வருவதாகவும் விளக்கினார்.

"பொதுவாக, இது 50 முதல் 65 டெசிபல் (decibels) வரம்பிற்குள் இருக்க வேண்டும். எனவே, அது அந்த எல்லையைத் தாண்டாமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் அதைத் தொடர்ந்து சோதித்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.

இந்த ஒலி அளவு பொதுவாக சாதாரண உரையாடல் அல்லது அலுவலகத்தின் பின்னணி ஒலிக்குச் சமமானதாகும் என அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.