சிலாங்கூரில் மேலும் இரு புதிய தரவு மைய வளாகங்களை அமைக்க கூகுள் திட்டம்

5 நவம்பர் 2026, 4:29 AM
சிலாங்கூரில் மேலும் இரு புதிய தரவு மைய வளாகங்களை அமைக்க  கூகுள் திட்டம்
சிலாங்கூரில் மேலும் இரு புதிய தரவு மைய வளாகங்களை அமைக்க  கூகுள் திட்டம்

சுங்கை பூலோ, நவ 5: கூகுள் நிறுவனம் சிலாங்கூரில் மேலும் இரு புதிய தரவு மைய (Data Center) வளாகங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

அதிகரித்திருக்கும் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அவ்விரு வளாகங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

கோலா சிலாங்கூர், புஞ்சாக் ஆலாமில் உள்ள 'எகோ பிசினஸ் பார்க்' (Eco Business Park) மற்றும் உலு சிலாங்கூரில் உள்ள செரண்டா UMV தயாரிப்பு பூங்கா (High Value Manufacturing Park) ஆகிய இரு இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கூகுள் ஆசிய பசிபிக் வட்டாரத்தின் உலகளாவிய உட்கட்டமைப்புத் தலைவர் கென் சியா (Ken Siah) தெரிவித்தார்.

திட்டமிடல் கட்டத்தில் இருக்கும் இந்த இரு புதிய மையங்களும், சுங்கை புலோவின் எல்மினா பிசினஸ் பார்க்கில் ஏற்கனவே உள்ள கூகுள் தரவு மையத்திற்கு கூடுதல் பலமாக அமையும்.

இந்த மூன்று மையங்களும் இணைந்து ஒரு 'முக்கியத்துவமான முக்கோண' (Strategic Triangle) அமைப்பாகச் செயல்படும்.

இதன் மூலம், ஏதேனும் ஒரு மையத்தில் தற்காலிகத் தடை ஏற்பட்டாலும், மற்ற இரு மையங்களுக்குச் சேவைகளை உடனடியாக மாற்றி, மலேசிய பயனீட்டாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தடையற்ற டிஜிட்டல் சேவையை வழங்க முடியும் என்று கென் சியா விளக்கினார்.

AI செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு முன்பாகவே, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் கூகுள் மலேசியாவில் முதலீடு செய்ய முடிவெடுத்ததாக கென் சியா தெரிவித்தார்.

கூகுள் தேடல் (Search), மேப்ஸ் (Maps), குரோம் (Chrome) போன்ற சேவைகளின் பயன்பாடு மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவையும் அந்த முதலீட்டுக்கு தூண்டுதலாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கூகுள் நிறுவனம் 2024 மே மாதத்தில் தனது மலேசியத் தரவு மையத் திட்டத்தை அறிவித்து, அதே ஆண்டு அக்டோபரில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது.

ஜோகூர் மற்றும் சைபர்ஜெயாவை விடவும் மின்சாரக் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி சாத்தியக்கூறுகள் சாதகமாக இருந்ததால் சிலாங்கூர் மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

உள்நாட்டிலேயே தரவு மையம் அமைப்பது வங்கி மற்றும் அரசாங்க துறைகளின் தரவு சேமிப்பு விதிகளைப் பூர்த்தி செய்ய உதவுவதுடன், அதிவேக டிஜிட்டல் சேவைகளுக்கும், விவேக தொழிற்சாலைகள் மற்றும் ரோபோடிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

மேலும், இந்த முதலீட்டின் மூலம் மலேசியாவின் கட்டுமானம், தளவாடங்கள் (Logistics), பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு ஆதரவு சேவைகளை வழங்கும் உள்ளூர் நிறுவனங்களுக்குப் புதிய வணிக வாய்ப்புகள் உருவாகும் என்று கென் சியா சுட்டிக்காட்டினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.