மலேசியாவில் தரவு மையங்களின் வளர்ச்சி,அதிக சம்பளம் கொண்ட உயர்தர வேலைகளை உருவாக்கும்

7 ஜூலை 2026, 9:01 AM
மலேசியாவில் தரவு மையங்களின் வளர்ச்சி,அதிக சம்பளம் கொண்ட  உயர்தர வேலைகளை உருவாக்கும்

ஷா ஆலாம், ஜூலை 7 — மலேசியாவின் விரைந்து வளர்ந்து வரும் தரவு மைய (Data Centre) சூழலமைப்பு, நாட்டில் வலையமைப்பு பொறியியல் (Network Engineering), கிளவுட் கட்டமைப்பு (Cloud Architecture) மற்றும் தரவு அறிவியல் (Data Science) உள்ளிட்ட துறைகளில் உயர் திறன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று இலக்கவியல் அமைச்சர் கோவிந்த் சிங் தெரிவித்தார்.

இத்துறையில் நுழைவு நிலை (Entry-level) பணிகளுக்கு மாதச் சம்பளமாக 3,000 ரிங்கிட் முதல் 7,000 ரிங்கிட் வரையிலும், மூத்த நிலை (Senior) பணிகளுக்கான ஊதியம் RM10,000 முதல் RM30,000 வரையிலும் கிடைக்கக்கூடும் என்றும், இது மலேசியாவின் 2024-ஆம் ஆண்டின் சராசரி வருமானமான சுமார் 2,790 ரிங்கிட்டை விட அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வெளியிடப்பட்ட, மலேசிய மத்திய வங்கியின் 'பைட்ஸ் முதல் பக்ஸ் வரை: மலேசியாவில் தரவு மையங்களின் பொருளாதாரம்' (From Bytes to Bucks: The Economics of Data Centres in Malaysia) என்ற அறிக்கையின்படி, தரவு மைய மேம்பாடு என்பது அதிக சம்பளத்துடனான உயர் திறன் வேலைவாய்ப்புகளை உருவாக்க பங்களிக்கிறது," என்று அவர் இன்று நாடாளுமன்றத்தின் கேள்வி-பதில் நேரத்தின் போது மக்களவையில் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வசதிகள் குறித்து எழுப்பப்பட்ட கவலைகளுக்குப் பதிலளித்த கோவிந்த், தரவு மைய மேம்பாட்டு பரிந்துரைகளை ஒருங்கிணைத்து மதிப்பிடுவதற்காக தரவு மைய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஒவ்வொரு தரவு மையத் திட்டமும் மின்சாரம் மற்றும் நீர் தேவை, நிலத் தேவைகள், இலக்கவியல் உள்கட்டமைப்பு ,நிலைத்தன்மை போன்ற பரிசீலனைகள் அடிப்படையில் மதிப்பிடப்படும் என்று அவர் கூறினார்.

தேசிய வளங்களின் மீதான சுமையைக் குறைப்பதற்காக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆற்றல் திறன்மிக்க குளிரூட்டும் தொழில்நுட்பங்கள், நீர் மறுசுழற்சி அமைப்புகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு தரவு மைய இயக்குநர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் கோவிந்த் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.