போலி MyKad சிப் தொடர்பான வழக்குகள் இதுவரை பதிவாகவில்லை: JPN

12 செப்டெம்பர் 2026, 8:59 AM
போலி MyKad சிப் தொடர்பான வழக்குகள் இதுவரை பதிவாகவில்லை: JPN

ஷா ஆலாம், செப். 12: அடையாள அட்டை மோசடிகளில் குளோன் செய்யப்பட்ட அல்லது போலியாக உருவாக்கப்பட்ட MyKad சிப் தொடர்பான எந்தவொரு சம்பவத்தையும் தேசிய பதிவுத் துறை (JPN) இதுவரை கண்டறியவில்லை.

புத்ராஜெயா JPN அமலாக்கப் பிரிவின் துணை விசாரணை இயக்குநர் சலிபா ரம்லி இதனைத் தெரிவித்தார்.

இதுவரை கண்டறியப்பட்ட மோசடி சம்பவங்கள் அனைத்தும் MyKad-ன் அட்டையைச் சார்ந்தவையாகவே இருப்பதாகவும், அதேவேளை MyKad சிப் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, போலியான MyKad-ஐ அடையாளம் காணக்கூடிய சில சந்தேகத்துக்குரிய அம்சங்களையும் சலிபா சுட்டிக்காட்டினார்.

அவற்றில் அட்டையின் தடிமன் மற்றும் அதில் அச்சிடப்பட்டுள்ள எழுத்துகளின் தரம் ஆகியவை அடங்கும்.

JPN கண்டறிந்துள்ள மோசடி முறைகளில் ஒன்று, ஒருவரின் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றி, அதனை மற்றொரு நபர் பயன்படுத்துவதாகும்.

அவ்வாறு மாற்றப்பட்ட MyKad-ஐ பயன்படுத்திய நபரின் கைரேகை, JPN முறைமையில் பதிவாகியுள்ள கைரேகையுடன் பொருந்தாதபோது இந்த மோசடி கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

இதனிடையே, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை JPN நாடு முழுவதும் 653 அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சலிபா தெரிவித்தார்.

அந்த நடவடிக்கைகளின் மூலம், அடையாள அட்டை தொடர்பான குற்றங்களுக்காக 262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 71 பேர், 1957ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறப்புப் பதிவின்போது தவறான தகவல்களை வழங்குதல் அல்லது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட குற்றங்கள் இதில் அடங்கும்.

அடையாள ஆவணங்கள் சட்டவிரோதமாக வேலைவாய்ப்பு பெறுவதற்கும், மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கும், அரசாங்க மானியங்கள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கும் பயன்படுத்தப்பட்ட சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக சலிபா தெரிவித்தார்.

அவற்றில் BUDI95 மற்றும் Sumbangan Asas Rahmah (SARA) போன்ற அரசாங்க உதவித் திட்டங்களும் அடங்கும்.

தங்களது அனுமதியின்றி மற்றவர்கள் தங்களது MyKad-ஐ பயன்படுத்தியிருப்பதை அறிந்த சில MyKad உரிமையாளர்களிடமிருந்தும் JPN-க்கு புகார்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, தங்களது MyKad-ஐ வேறு எவருக்கும் கடனாக வழங்க வேண்டாம் என சலிபா பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

அதேபோல், தங்களுக்குச் சொந்தமில்லாத அடையாள அட்டையைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது RM20,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.