2030-க்குள் புதுப்பொலிவு பெறும் கிள்ளான் நதி: உள்ளூர் மக்களுக்குப் புதிய பொருளாதார வாய்ப்புகள்

10 செப்டெம்பர் 2026, 3:25 AM
2030-க்குள் புதுப்பொலிவு பெறும் கிள்ளான் நதி: உள்ளூர் மக்களுக்குப் புதிய பொருளாதார வாய்ப்புகள்
2030-க்குள் புதுப்பொலிவு பெறும் கிள்ளான் நதி: உள்ளூர் மக்களுக்குப் புதிய பொருளாதார வாய்ப்புகள்

ஷா ஆலம், செப் 10 : 2030-ஆம் ஆண்டிற்குள், கிள்ளான் நதி, வெறும் மீட்டெடுக்கப்பட்ட ஒரு நதியாக மட்டும் இருக்காமல், வணிகம், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் துறைகளை உள்ளடக்கிய ஒரு புதிய பொருளாதாரப் பகுதியாக உருவெடுக்கும் .

நதி சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள், வேலை வாய்ப்புகளை உருவாக்குமென,

சிலாங்கூர் கடல்சார் நுழைவாயில் பொருளாதார மேம்பாட்டு மண்டலத்தின் (ZPE-SMG) செயலாக்க நிறுவனமான லண்டாசான் லுமாயான் ( Landasan Lumayan Sdn Bhd-LLSB) நிறுவனம் தெரிவித்தது.

கிள்ளான் நதியின் மேம்பாட்டினால் சிறந்த வீட்டுவசதி, தரமான பொது இடங்கள், தொழில்முனைவோர் வாய்ப்புகள் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட நன்மைகளை உள்ளூர் மக்கள் பெறுவார்கள் என்று அந்நிறுவனம் கூறியது.

"சுற்றுச்சூழல் மீட்பும் பொருளாதார வளர்ச்சியும் இணையாக பயணிக்க முடியும் என்பதை நாம் நிரூபிக்கும்போதுதான் உண்மையான வெற்றி கிடைக்கும்; நதி மீட்டெடுக்கப்படுகிறது, பொருளாதாரம் வளர்கிறது மற்றும் மக்கள் பயனடைகிறார்கள்," என்று எல்.எல்.எஸ்.பி (LLSB) மீடியா சிலாங்கூருக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தது.

சுற்றுலா, உணவு மற்றும் பானங்கள், படகு சேவைகள், பொழுதுபோக்கு மற்றும் தொழில்முனைவோர் உள்ளிட்ட புதிய வணிகத் துறைகளுக்கு, சிலாங்கூர் கடல்சார் நுழைவாயில் பொருளாதார மேம்பாட்டு மண்டலத்தின் (ZPE-SMG) வளர்ச்சி, வழிவகுக்கும் என்று LLSB குறிப்பிட்டது.

நதிக்கரையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள், உயர்தர பொது இடங்கள், பொழுதுபோக்கு பகுதிகள், சமூக வசதிகள் மற்றும் சிறந்த வீட்டுவசதி வாய்ப்புகளை உருவாக்குவதை உறுதிசெய்யவும் அந்த நிறுவனம் விரும்புகிறது.

"சுற்றுச்சூழல் ரீதியாகப் பார்க்கும்போது, ஒவ்வொரு மேம்பாட்டுத் திட்டமும் கிள்ளான் நதியின் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பபதில் இணையாகச் செயல்பட வேண்டும்," என்று LLSB மேலும் கூறியது.

சதுப்புநில( மங்க்ரோவ் ) பாயிண்ட் பொழுதுபோக்குப் பூங்காவை (Taman Rekreasi Mangrove Point) சூழலியல் சுற்றுலா (ecotourism) மற்றும் சுற்றுச்சூழல் கல்விக்கான சிறந்த ஆற்றல் கொண்ட ஒரு சுற்றுச்சூழல் சொத்தாக LLSB கருதுகிறது.

கிள்ளானில் அமைந்திருக்கும் மங்க்ரோவ் பாயிண்ட் பூங்கா : படம் : மீடியா சிலாங்கூர்

கே.ஆர்.யு எண்டர்டெயின்மென்ட் (KRU Entertainment Sdn Bhd) நிறுவனத்துடனான ஒத்துழைப்பின் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் செய்தியை மிகவும் ஆக்கப்பூர்வமான வகையில் வழங்க கல்வி சார்ந்த பொழுதுபோக்கு கூறுகளை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

மங்க்ரோவ் பாயிண்ட் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துவதுடன், அனிமேட்ரானிக்ஸ் (animatronics), ஒளிக்காட்சிகள் மற்றும் நதி/நீர் சார்ந்த செயல்பாடுகள் உள்ளிட்ட புதிய அனுபவங்களை அறிமுகப்படுத்தும்.

"இந்த மேம்பாடு புதிய பொருளாதார வாய்ப்புகளைத் திறப்பதோடு, பொழுதுபோக்கு, சுற்றுலா மற்றும் சூழலியல் சுற்றுலா நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் சமூகத்திற்கு நன்மைகளை உருவாக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது," என்று LLSB தெரிவித்தது.

கிள்ளானில் அமைந்திருக்கும் மங்க்ரோவ் பாயிண்ட் பூங்கா : படம் : மீடியா சிலாங்கூர்

மங்க்ரோவ் பாயிண்ட்டின் இரண்டாம் கட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கு சுமார் 7.1 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது முக்கிய உட்கட்டமைப்புகள், வசதிகள் மற்றும் புதிய சூழலியல் சுற்றுலா மற்றும் கல்வி-பொழுதுபோக்கு ஈர்ப்புகளை உள்ளடக்கியிருக்கும்.

இந்த மேம்பாட்டுப் பணிகள் இவ்வாண்டின் நான்காம் காலாண்டில் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளது.

கம்போங் ஃபஜார் (Kampung Fajar) மேம்பாட்டைப் பொறுத்தவரை, நவீன வீட்டுவசதி மூலம் நகர்ப்புறக் குடியேற்றவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் எல்.எல்.எஸ்.பி இந்த குடியிருப்புப் பகுதிக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கும்.

ஹுலு கிள்ளானில் உள்ள ஃபாஜார் கிராமம் : படம் : மீடியா சிலாங்கூர்

இந்த மறுமேம்பாடு, திட்டமிடப்படாத குடியிருப்புகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் மற்றும் கிள்ளான் நதியை அழகுபடுத்தும் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்தும்.

இந்த வீட்டுவசதி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கும், அதே நேரத்தில் குடிசைப்பகுதி குடியிருப்புகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுற்கும் மாநில அரசு சுமார் 60 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

திட்டமிடல் செயல்முறைகள் 2025-இல் தொடங்கப்பட்டதாக LLSB விளக்கியது.

இதில் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் குடியிருப்புகளின் கட்டமைப்பை மறுசீரமைத்தல் ஆகியவை அடங்கும். ஜனவரி 2027 -இல் நேரடி கட்டுமானப் பணிகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது," அந்நிறுவனம் கூறியது.

சுற்றுச்சூழலை அழித்து மேம்பாடுகளைச் செய்ய LLSB விரும்பவில்லை; மாறாக ஆரோக்கியமான நதியே நிலையான மேம்பாட்டிற்கு அடிப்படையாக அமைவதை உறுதி செய்கிறது," என்று அந்நிறுவனம் கூறியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.