ad

மோரிப் போர் நினைவுச் சின்னம் பாரம்பரிய பகுதியாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் - பாப்பாராய்டு

9 செப்டெம்பர் 2025, 8:40 AM
மோரிப் போர் நினைவுச் சின்னம் பாரம்பரிய பகுதியாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் - பாப்பாராய்டு

ஷா ஆலம், செப். 9 - மோரிப் கடற்கரையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தைப் பாதுகாத்து மாநிலப் பாரம்பரிய தளமாக அரசிதழில்  வெளியிட வேண்டும் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு முன்மொழிந்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டங்களில் அதாவது  1945 ஆம் ஆண்டு ஆபரேஷன் ஜிப்பர் நடவடிக்கையின் போது மோரிப்பில்  தரையிறங்கிய வீரர்களின் பாரம்பரிய தருணத்தை  நினைவுக்கூறும்  வகையில் இந்த நினைவுச் சின்னம் கட்டப்பட்டது.

மலேசிய ஆயுதப்படை இந்திய வீரர்கள் சங்கத்தின் (பெரிம்) சிலாங்கூர் பாரு பிரிவு ஏற்பாடு செய்த 80வது ஆண்டு நினைவு விழாவில்  உரையாற்றிய பாப்பாராய்டு,  இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ்-இந்திய துருப்புக்கள் செய்த தியாகங்களை நினைவுக்கூறும்  ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக இந்த நினைவுச்சின்னம் விளங்குகிறது  என்றார்.

இதனால்தான் இந்த நினைவுச்சின்னம் பராமரிக்கப்பட்டு மாநில பாரம்பரிய தளமாக அரசிதழில்  வெளியிடப்பட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். இதன் வழி வரலாற்று சிறப்புமிக்க ஆபரேஷன் ஜிப்பர் நடவடிக்கை  மற்றும் நமது வீரர்களின் தியாகங்கள் எதிர்கால சந்ததியினரால் எப்போதும் நினைவுகூரப்படும்.

இந்த மாவீரர்களின் தியாகங்கள் விலைமதிப்பற்றவை. அவை என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டும். அடுத்த தலைமுறையினர் மத்தியில் நாட்டுப் பற்றை  வலுப்படுத்துவது, ஒற்றுமையை வளர்ப்பது மற்றும் அவர்களின் தியாகங்களைச் சுமந்த குடும்பங்களை கௌரவிப்பது நமது கடமையாகும் என்று அவர் தனது முகநூல்  பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்

பந்திங்கில் உள்ள மோரிப் கடற்கரையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  நேபாளம் மற்றும் இந்தியாவின்  தூதர்கள், கோல லங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், படைவீரர்களின் குடும்பங்கள் மற்றும் உள்ளூர் சமூக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி  ஆபரேஷன் ஜிப்பர் நடவடிக்கையின் கீழ் இரு நாட்டு படைகள் இங்கு தரையிறங்கின.

ஜப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்து மலாயாவை விடுவிப்பதற்கான ஒரு பெரிய அளவிலான தாக்குதலாக திட்டமிடப்படுவது இதன் நோக்கமாக இருந்தது. இதில் 100,000 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ்-இந்திய துருப்புக்கள் ஈடுபட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.