பந்திங், நவம்பர் 6 — கிள்ளான் பள்ளத்தாக்கில் சுற்றுலா மையமாக மீண்டும் உயிர் பெறவிருக்கும் மோரிப் கடற்கரையில் தற்போது RM47 மில்லியன் மதிப்பிலான கடற்கரை பாதுகாப்பு திட்டம் நடைபெற்று வருகிறது. கோலா லங்காட் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையின் கீழ் நடைபெறும் இந்த திட்டம் கடந்த 2023 செப்டம்பர் 1 அன்று தொடங்கியதாகும். மேலும் தற்போது 85 சதவீதம் பணி முடிவடைந்துள்ளதாகவும், திட்டம் கால அட்டவணைக்குச் சிறிது முன்னேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி மோரிப் கடற்கரையின் பழைய மணற்கரையை மீண்டும் உயிர்ப்பிப்பதாகும். “இதன் பொருள், மொரிப் கடற்கரையில் மீண்டும் மணற்கரை இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் கடற்கரை சுவர் (seawall) அமைக்கப்படுவதுடன், அதன் முன்பகுதியில் மணல் நிரப்பப்படும். இதன் மூலம் மணற்கரை மீண்டும் உருவாக்கப்படும்,” என அவர் மீடியா சிலாங்கூருடன் நடைபெற்ற பார்வையின் போது அத்துறையின் மாவட்ட பொறியாளர் முகமது ஹஸ்ருல்ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மேலும் இந்த பாதுகாப்புத் திட்டத்தில் கடல் தடுப்பு கட்டமைப்பு, M வடிவ நடைபாதை மற்றும் ஒரு கலங்கரை விளக்க கோபுரம் போன்ற முக்கிய கூறுகள் அடங்கியுள்ளன.இயற்கையான கடற்கரை மீட்டெடுக்க “beach nourishment” பணிகளும் நடைபெற்று வருகின்றன. “இந்தப் பணி முடிந்ததும், சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு நெருக்கமாக சென்று அதன் அழகை அனுபவிக்க முடியும்; முன்பு போல் தூரத்திலிருந்து மட்டுமே பார்க்க வேண்டிய அவசியமில்லை,” என அவர் தெரிவித்தார்.
இந்த முயற்சி அந்தப் பகுதியை புதிய சுற்றுலா மையமாக மாற்றும் என்பதில் நம்பிக்கை உள்ளதாகவும், இதனால் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் எனவும் தெரிவித்தார். “மோரிப் கடற்கரை விரைவில் புதிய சுற்றுலா தலமாக உருவெடுக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம், இது உள்ளூர் சமூகத்திற்கு நன்மை அளிக்கும்,” என அவர் கூறினார்.




