ஷா ஆலாம், செப் 4 : சிலாங்கூர் அணி நாளை தொடங்கும் 2026 பாரா சுக்மா (Para SUKMA) விளையாட்டுப் போட்டியில் , 60 தங்கப் பதக்கங்களை வெல்ல இலக்குக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 5 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் அந்தப் போட்டியில், எடை தூக்கும் (Powerlifting) பிரிவில் மட்டும் நான்கு தங்கப் பதக்கங்களை வெல்ல சிலாங்கூர் அணி குறிவைத்துள்ளது.
அண்மையில், 2026 சுக்மா (SUKMA) போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளராக உருவெடுத்ததை அடுத்து, பாரா சுக்மாவிலும் வெற்றி வாகை சூட சிலாங்கூர் மாநில அணி உறுதிப் பூண்டுள்ளது.
இம்முறை சிலாங்கூர் மாநிலமே போட்டியை ஏற்று நடத்துவதால் தாய்மண் சாதகம் தங்களுக்குக் கூடுதல் பலமாக இருக்கும் என்று சிலாங்கூர் அணியின் தலைவர் லிம் யீ வெய் நம்பிக்கை தெரிவித்தார்.
உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சிறப்பான ஒத்துழைப்புடன் இம்முறை விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சிகள் மிகவும் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மாநில விளையாட்டு வாரியம் தங்களுக்கு வழங்கியுள்ள தங்குமிட வசதிகள் மற்றும் முறையான மாதாந்திரர அலவன்ஸ் ஊக்குவிப்புத் தொகை குறித்து விளையாட்டு வீரர்கள் மிகுந்த மனநிறைவோடு உள்ளதாகவும், இது அவர்களின் வெற்றி உத்வேகத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதே வேளையில், மாநிலத்தில் தற்போது மகளிர் பாரா விளையாட்டு வீரர்களின் பற்றாக்குறை நிலவுவதைச் சுட்டிக்காட்டிய லிம் யீ வெய், விளையாட்டுகளில் ஈடுபடுவதால் தங்களது உடல் அமைப்பு மாறிவிடும் என்ற தயக்கத்தினால் பல பெண்கள் முன்வருவதில்லை என்று விளக்கினார்.
இந்த நிலையை மாற்றி, நீண்ட கால விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிலாங்கூர் மாற்றுத் திறனாளிகள் செயற்குழுவுடன் இணைந்து புதிய விளையாட்டு வீராங்கனைகளைக் கண்டறிந்து உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இம்முறை பாரா சுக்மா போட்டியில் நீச்சல், தடகளம், பூப்பந்து, மேஜைப்பந்து, போலிங், வில்வித்தை, சதுரங்கம், போசியா மற்றும் எடை தூக்குதல் உட்பட பத்து விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 369 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
மற்றொரு புறம், அனுபவம் குறைந்த இளம் வீரர்கள் பெரிய அளவிலான போட்டிகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் பயத்தைப் போக்க, மூத்த வீரர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் சிறப்பு ஏற்பாடுகளைப் எடை தூக்கும் குழு செய்துள்ளது.
பெரும்பாலான வீரர்கள் புதியவர்களாக இருப்பதால் அவர்களுக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன என எடைதூக்கும் பயிற்சியாளர் முகமது நஸ்ரிசாரிசல் மாத் சாத் தெரிவித்தார்.
முந்தைய போட்டிகளை விட இம்முறை சிலாங்கூர் அதிக எண்ணிக்கையிலான வீரர்களைக் களம் இறக்குவதால், முந்தைய சாதனைகளின் அடிப்படையில் எடை தூக்கும் பிரிவில் நான்கு தங்கம் உட்பட பல பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு தங்களுக்குப் பிரகாசமாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.







