
ஷா ஆலாம், ஜூலை 30 ; ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கவுள்ள 2026 மலேசிய சுக்மா விளையாட்டுப் போட்டியில் 80 தங்கப் பதக்கங்களை வெல்லும் இலக்கை சிலாங்கூர் எட்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
போட்டிக்கு முன்னதாக இறுதி கட்டப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட தடகள வீரர்களின் தற்போதைய செயல்திறன் மற்றும் தயார் நிலையின் அடிப்படையில் அந்த இலக்கு தக்கவைக்கப்பட்டுள்ளதாக இளைஞர், விளையாட்டு , தொழில்முனைவோருக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

"எங்களின் தங்கப் பதக்க இலக்கை 80 ஆகத் தக்கவைத்துள்ளோம். தயார் முறையைப் பொறுத்தவரை, தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறோம். சுக்மா தொடங்குவதற்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன.
"தொடக்க விழாவுக்கான தயார் நிலையைப் பொறுத்தவரை, அந்த விழா சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் (MBI) இறுதி கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விழா எளிமையாக நடத்தப்பட்டாலும், விமரிசையாக நடைபெறுவதை உறுதி செய்வோம்.
ஆனால், அதைவிட முக்கியமானது என்னவென்றால், அனைத்து விளையாட்டு நிகழ்வுகளின் நிர்வாகமும் மேலாண்மையும் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
அதே வேளையில், இந்த இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விளையாட்டுப் போட்டி சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, சுக்மா தன்னார்வலர்களுக்கான விளக்கக் கூட்டங்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருவதாக முகமட் நஜ்வான் கூறினார்.
சுக்மா போட்டிகள் நடைபெறும் அனைத்து இடங்களும் மேம்படுத்தப்பட்டு, தற்போது பயன்படுத்தத் தயாராக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
22-ஆவது சுக்மா போட்டிகள் சிலாங்கூரில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் உள்ள 52 விளையாட்டுத் திடல்களில், 37 வகையான விளையாட்டுகளை உள்ளடக்கிய 469 போட்டிகளாக நடத்தப்படவுள்ளன.
இதற்கிடையில், பாரா சுக்மா (Para SUKMA) போட்டிகளில் நீச்சல், தடகளம், பூப்பந்து, மேஜை பந்து (பிங் பாங்), டென்பின் பௌலிங், லான் பௌலிங், வில்வித்தை, சதுரங்கம், போச்சியா (boccia) மற்றும் பவர்லிஃப்டிங் ஆகிய 10 வகையான விளையாட்டுகளில் 369 போட்டிகள் நடத்தப்படும்.
நாட்டின் இந்த மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியில் அனைத்து மாநிலக் குழுக்களும் பங்கேற்கும் வேளையில், புரூணை டாருஸ்சலாம் அழைக்கப்பட்ட குழுவாகப் பங்கேற்கிறது.
இதன் மூலம் மொத்த பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 15 குழுக்களாக உயர்ந்துள்ளது.









