சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அமர்த்திய முதலாளிகளுக்கு 59 லட்சம் ரிங்கிட் அபராதம்

8 ஏப்ரல் 2026, 9:35 AM
சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அமர்த்திய முதலாளிகளுக்கு 59 லட்சம் ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர், ஏப்ரல் 8 – இந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட குறுகிய காலக்கட்டத்தில், சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அமர்த்தியது மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக 347 முதலாளிகளுக்கு மொத்தம் 59 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்கத் தவறும் முதலாளிகளுக்கு ஒரு பாடமாக அமையும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குடிநுழைவுத் துறைத் தலைவர் டத்தோ ஜகாரியா ஷாபான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சட்டவிரோதக் குடியேறிகள் நாட்டில் வேலை தேடி வருவதைத் தடுக்க வேண்டுமானால், அவர்களுக்கு வேலை வழங்கும் முதலாளிகள் மீதுதான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் துறை உறுதியாக உள்ளது.

"முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதவரை, இந்த நாட்டில் மிக எளிதாக வேலை கிடைத்துவிடும் என்ற எண்ணம் சட்டவிரோதக் குடியேறிகள் மத்தியில் இருக்கும்.

அனைத்து முதலாளிகளும் பொறுப்புடன் செயல்பட்டு, சட்டவிரோத முறையில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தவிர்த்தால், வெளிநாட்டினர் சட்டவிரோதமாக இங்கு ஊடுருவுவது பெருமளவில் குறையும் என நான் நம்புகிறேன்," என அவர் குறிப்பிட்டார்.

இன்று பாலக்கோங் பகுதியில் உள்ள இரும்புத் தொழிற்சாலை ஒன்றில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைக்குப் பிறகு அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.

கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், 2025-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1,939 முதலாளிகளுக்கு 3 கோடியே 66 லட்சத்து 46 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதன் மூலம் சட்டவிரோதக் குடியேறிகள் விவகாரத்தில் அரசாங்கம் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என்பதை அவர் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.