ஷா ஆலாம், ஆகஸ்ட் 8 - RS-2 இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் கீழ், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் , பேரிடர் நிர்வகிப்பை வலுப்படுத்தவும் SelFMiP எனப்படும் வெள்ளத் தடுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம், மாவட்ட அளவிலான கொள்கைத் திட்டமிடலையும், பருவநிலை மாற்றத்தின் அபாயங்களையும் முழுமையாக ஒருங்கிணைக்கும் ஒரு விரிவான வெள்ளப் பாதுகாப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்படுமென சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் RS-2 திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
வெள்ளப் பிரச்சினை இன்னும் மக்களின் இதயங்களைத் தொடும் ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. எனவே, வெள்ளப் பெருக்கு ஒரு குடும்பத்தின் பேரிடராக மாறிவிடாமல் இருக்க முறையான திட்டமிடலும் முதலீடும் அவசியெமென மந்திரி பெசார் கூறினார்.
அதையடுத்து, பேரிடர் எச்சரிக்கைகளின் துல்லியத்தன்மையை அதிகரிக்கவும், பேரிடர் அபாயத்தை விரைந்து எதிர்கொள்ளவும், ஒருங்கிணைந்த பருவநிலை தரவு நிர்வாக முறை உருவாக்கப்படவுள்ளது.
இந்த முறை, பல்வேறு மாநில நிறுவனங்களுக்கு இடையே சிதறிக்கிடக்கும் பேரிடர், நீரியல் மற்றும் புவியியல் சார்ந்த இடஞ்சார்ந்த தரவுகளை ஒன்றிணைக்குமென அமிரூடின் ஷாரி கூறினார்.







