ஷா ஆலாம், செப். 2: மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு நேரடியாகப் பங்களிக்காத அவசியமற்ற நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களை கல்வி அமைச்சு (MOE) ரத்து செய்யவுள்ளது.
இதனை கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
ஆசிரியர்களின் முக்கியப் பொறுப்பு மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதாகும். அந்தப் பொறுப்பில் அவர்கள் முழுமையாகக் கவனம் செலுத்துவதற்கு இடையூறாக அமையும் அவசியமற்ற திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை கல்வி அமைச்சு படிப்படியாக அகற்றும்.
இதில் பள்ளியில் தூய்மையான கழிவறை, அழகான தோட்டம் மற்றும் சிறந்த வகுப்பறை போன்ற போட்டிகளும் அவசியமற்ற நிகழ்ச்சிகளாகக் கருதப்பட்டு ரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதற்காகக் கல்வி அமைச்சு முன்னெடுக்கவுள்ள ஏழு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். எஞ்சிய ஆறு நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஃபட்லினா கூறினார்.







