கோலாலம்பூர், ஆகஸ்ட் 3: சிலாங்கூரில் ஆசிரியர் ஒருவர் அண்மையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிச் சமூகத்திற்கான உளவியல் சமூக ஆதரவை வலுப்படுத்தக் கல்வி அமைச்சு (MOE) அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகக் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.
அரசாங்கசார்பற்ற அமைப்புகள் (NGO), சுகாதார அமைச்சு மற்றும் ஆலோசகர்களின் கூட்டுறவுகள் மூலம் கல்விச் சமூகத்தின் மனநலத்திற்கு அமைச்சு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாக அவர் கூறினார்.
"நாம் இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன, அவற்றை நாம் ஒன்றாக இணைந்து தொடர்ந்து செய்வோம். நான் மிகவும் நேசிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும், நீங்கள் தனியாக இல்லை என்பதைத் தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள்," என்று அவர் தமது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறும், ஊகங்களைத் தவிர்க்குமாறும், ஆசிரியரின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறியக் காவல்துறை தனது விசாரணையை மேற்கொள்ள உரிய ஒத்துழைப்பை வழங்குமாறும் அனைத்துத் தரப்பினரையும் பட்லினா கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொள்ளவும், ஒருவருக்கொருவர் செவிமடுத்து சக ஊழியர்கள் நன்றாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் நேரம் ஒதுக்குமாறு அவர் வலியுறுத்தினார்.







