கோலாலம்பூர், ஆகஸ்ட் 30: மலேசிய பூப்பந்து சங்கத்தின் (BAM) செயல்திறன் குழுத் தலைவர் டத்தோ ஸ்ரீ லீ சோங் வெய், தாம் எடுக்கும் எந்தவொரு முடிவும் தனிப்பட்ட நலனை அடிப்படையாகக் கொண்டதல்ல என தெரிவித்தார்.
மலேசிய பூப்பந்து சங்கம் மற்றும் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுவதாகவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இதனிடையே, ஆச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மலேசிய பூப்பந்து அணியில் தேசிய ஆண்கள் இரட்டையர் வீரர் சோ வூய் யிக்கை சேர்க்காத முடிவு தமது தனிப்பட்ட முடிவு அல்ல என்றும் லீ சோங் வெய் தெளிவுபடுத்தினார்.
வீரர்களின் தற்போதைய செயல்திறன் மற்றும் உடல் நிலை உள்ளிட்ட அம்சங்களை மதிப்பீடு செய்த பயிற்சியாளர்கள் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், சோ வூய் யிக்கை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று தாமே தனிப்பட்ட முறையில் முடிவு செய்ததாகக் கூறப்படும் கருத்தை லீ சோங் வெய் மறுத்தார்.
சமூக வலைத்தளங்களில் தாம் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருவதாகவும், சில கருத்துகள் மனதைப் புண்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.







