ஷா ஆலம், ஆகஸ்ட் 30: மோசடி நடவடிக்கைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு, வரும் ஆண்டுகளில் மோசடி உள்ளடக்கங்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் : மேலும் அவற்றை கண்டறிவதையும் கடினமாக்கும் .
ஏஜென்டிக் ஏஐ (agentic AI) மற்றும் சுயமாக இயங்கும் முறைகளைப் (autonomous systems) பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் இப்போது தானியங்கி முறையில் பெருமளவிலான மோசடி செய்திகளையும் உள்ளடக்கங்களையும் உருவாக்கி வருகின்றனர் என மலேசிய சைபர் பயனீட்டாளர் சங்கத்தின் (MCCA) தலைவர் சிராஜ் ஜலீல் தெரிவித்தார்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மோசடி உள்ளடக்கங்கள் மிகவும் உண்மையானவைப் போலவே உருவாக்கப்படுகின்றன. இதனால் மக்களால் உண்மையான உள்ளடக்கத்திற்கும் போலியானதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிவது கடினமாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
"மோசடி செய்பவர்கள் அல்கோ ஸ்பீக் (algo speak) போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி வார்த்தைகள், குறியீடுகள் அல்லது உள்ளடக்க வடிவங்களை மாற்றியமைக்கிறார்கள்.
இதன் மூலம் தளங்களின் அல்காரிதம் (Algorithm )மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாட்டு (moderation) முறைகளிடம் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.
"முன்பெல்லாம் மோசடி உள்ளடக்கங்களை எளிதாக அடையாளம் காண முடிந்தது. ஆனால் இப்போது, ஏ.ஐ அறிமுகத்திற்குப் பிறகு, காணொளிகள் மற்றும் உள்ளடக்கங்கள் மிகவும் தத்ரூபமாக மாற்றியமைக்கப்படுவதால் அவை மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளன," என்று மீடியா சிலாங்கூர் செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.
இந்த வளர்ச்சி மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC ) போன்ற அதிகாரிகளுக்கும், சமூக ஊடக தளங்களுக்கும் மோசடி உள்ளடக்கங்களை விரைவாகக் கண்டறிந்து அகற்றுவதில் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
எனவே, அரசாங்கம் மற்றும் சமூக ஊடகத் தளங்களின் நடவடிக்கைகளை மட்டுமே முழுமையாக நம்பியிருக்காமல், சமூக ஊடகங்களில் சந்தேகத்திற்குரிய உள்ளடக்கங்களைக் காணும்போது பயனீட்டாளர்களும் அவற்றைப் புகாரளிப்பதன் மூலம் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று சிராஜ் கூறினார்.
"ஏதேனும் சந்தேகத்திற்குரிய உள்ளடக்கத்தைக் கண்டால், உடனடியாகப் புகாரளியுங்கள். அதை அப்படியே விட்டுவிடாதீர்கள். ஏனெனில், ஒரு மோசடி உள்ளடக்கத்துடன் நாம் தொடர்பு கொள்ளும்போது (interaction), அதுபோன்ற பல விளம்பரங்கள் நம்மை இலக்கு வைத்து காட்டப்படுவதற்கு வழிவகுக்கும்," என்றார்.
மேலும், மிகவும் கவர்ச்சிகரமானதாக அல்லது நம்ப முடியாத அளவிற்கு லாபம் தருவதாகத் தோன்றும் விளம்பரங்களை, குறிப்பாக நிதிச் சலுகைகள் தொடர்பான விளம்பரங்களை,மக்கள் கிளிக் செய்யவோ அல்லது தொடர்பு கொள்ளவோ வேண்டாம் என்றும் சிராஜ் அறிவுறுத்தினார்.
இவ்வாண்டு ஜூலை 15 வரை 99,693 மோசடி தொடர்பான சமூக ஊடக உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதாக கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி , தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் கூறியிருந்தார்.
இவ்வெண்ணிக்கை 2025-ஆம் ஆண்டு முழுவதும் அகற்றப்பட்ட 98,503 உள்ளடக்கங்களை விட அதிகமாகும்.
அதே காலகட்டத்தில், மெட்டா (Meta), டிக்டாக் (TikTok) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற சமூக ஊடக தளங்களுக்கு அத்தகைய உள்ளடக்கங்களை அகற்றுவதற்காக 106,268 கோரிக்கைகள் அனுப்பப்பட்டன.
கடந்த ஆண்டு முழுவதும் இந்த எண்ணிக்கை 102,113 ஆக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.







