கோல திரெங்கானு, அக். 8 - சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள தனது பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அச்சுறுத்திய தொலைபேசி மோசடி கும்பலின் வலையில் சிக்கி வர்த்தகர் ஒருவர் 83,500 வெள்ளியை இழந்தார்.
இம்மாதம் 1 ஆம் தேதி, 35 வயதான அந்த நபரை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (எம்சிஎம்சி) அதிகாரி எனக் கூறிக்கொண்ட சந்தேக நபர் தொடர்பு கொண்டதாகக் கோல தெரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நூர் கூறினார்.
பின்னர் அந்த அழைப்பு போலீஸ் அதிகாரி எனக் கூறப்படும் மற்றொரு நபருடன் இணைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் பணமோசடி மற்றும் வங்கிக் கணக்கு மோசடியில் ஈடுபட்டதாக அந்த அதிகாரி மிரட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமானால் தணிக்கை மற்றும் விசாரணை பணிகளுக்காகப் பாதிக்கப்பட்டவர் தனது சேமிப்புகள் அனைத்தையும் சந்தேக நபரால் வழங்கப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது என அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பீதியடைந்த பாதிக்கப்பட்டவர் மூன்று வெவ்வேறு கணக்குகளுக்கு சேமிப்பு மற்றும் வணிக வருமானம் உள்பட மொத்தம் 83,500 வெள்ளியை மாற்றியதாக அஸ்லி கூறினார்.
பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர் நேற்று மாலை 6.17 மணிக்கு போலீசில் புகார் அளித்ததாகவும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்
தொலைபேசி மோசடி கும்பலிடம் வர்த்தகர் வெ.83,500 இழந்தார்
8 அக்டோபர் 2025, 6:07 AM