ஷா ஆலம், செப். 30 - கணவர் மற்றும் தாயாரின் கணக்குகளில் பணத்தை வரவு வைத்ததன மூலம் 170,000 வெள்ளிக்கும் அதிகமான ஸகாத் நிதியை மோசடி செய்ததை ஒப்புக்கொண்ட சிலாங்கூர் ஸகாத் வாரியத்தின் முன்னாள் நிர்வாக உதவியாளருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தனது முதலாளியை ஏமாற்றியதற்காக தண்டனைச் சட்டத்தின் 417வது பிரிவின் கொண்டுவரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து சித்தி அஸ்ரின் முகமது அய்னி (வயது 35) என்ற அந்த மாதுவுக்கு ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்தது.
கடந்த 2019 ஜூன் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் வரை தனது தாயாரின் கணக்கில் 62,525 வெள்ளியை டெப்பாசிட் செய்ததாக சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டில் ஐந்து பிள்ளைகளைக் கொண்ட சித்தி அஸ்ரினுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2020 மார்ச் முதல் 2023 டிசம்பர் வரை தனது கணவரின் கணக்கில் 108,050 வெள்ளியை சேர்த்த குற்றத்திற்காக ஏழு மாத கர்ப்பிணியான அந்தப் பெண் 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
இருப்பினும், இவ்விரு தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்க மாஜிஸ்திரேட் முகமது ஷயாபிக் சுலைமான் என்று உத்தரவிட்டார். இதன் வழி தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்கள் மட்டுமே அவர் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிவரும்.
இருப்பினும், மேல்முறையீட்டு செயல்முறை நிலுவையில் உள்ளதால் தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவர் செய்த விண்ணப்பத்தை நீதிமன்றம் அனுமதித்தது.
வெ.170,000 மோசடி- ஸகாத் வாரிய முன்னாள் ஊழியருக்கு ஓராண்டு சிறை
30 செப்டெம்பர் 2025, 2:47 AM