ஷா ஆலாம், ஆகஸ்ட். 29: எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி திட்டமிட்டபடி புத்ராஜெயா சதுக்கத்தில் 2026ஆம் ஆண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டம் நடைபெறும் என்று தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இந்நிகழ்வுத் தளத்தில் நிலவும் புகைமூட்டம் நிலையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களுடன் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.
எனினும், புகைமூட்டம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும் என்றும், தேவை ஏற்பட்டால் செயற்கை மழை பெய்யச் செய்யும் நடவடிக்கையும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தில் 80,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி விடுமுறைக் காலம் என்பதும், ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் பல்வேறு போக்குவரத்து வசதிகளும் அதிகளவிலான மக்கள் வருகை தருவதற்கு சாதகமாக அமையும். இந்த ஆண்டு பிரசரானா மலேசியா பெர்ஹாட் 24 மணி நேர MRT சேவையை வழங்குகிறது.
தற்போது இக்கொண்டாட்டத்திற்கான இறுதி ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.








