உணவு விநியோகப் பாதிப்புகளை சமாளிக்க வீட்டுத் தோட்டப் பிரச்சாரம் முன்னெடுப்பு– அமைச்சர்

29 ஆகஸ்ட் 2026, 7:22 AM
உணவு விநியோகப் பாதிப்புகளை சமாளிக்க வீட்டுத் தோட்டப் பிரச்சாரம் முன்னெடுப்பு– அமைச்சர்

ஷா ஆலாம், ஆகஸ்ட். 29: உணவு விநியோகத்தில் ஏற்படும் தடைகள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பருவநிலை மாற்றம் ஆகியவற்றை சமாளிக்க, பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே காய்கறிகள் மற்றும் மூலிகைத் தாவரங்களைப் பயிரிடுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இதன் மூலம் அன்றாட உணவுச் செலவைக் குறைத்துக்கொள்வதுடன், உணவு விநியோகத்தில் இடையூறு ஏற்படும் காலங்களில் காய்கறிகள் மற்றும் மூலிகைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

கிடைக்கக்கூடிய இடங்களைப் பயன்படுத்தி அன்றாட சமையலுக்குத் தேவைப்படும் காய்கறிகள் மற்றும் மூலிகைகளைப் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் ‘கெபுன் டி ரூமா சென்டிரி’ (Kendiri) எனும் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக டத்தோஸ்ரீ முகமட் சாபு கூறினார்.

எனினும், இந்த நடவடிக்கை நாட்டின் தற்போதைய உணவு உற்பத்தி மற்றும் விநியோக முறையை மாற்றுவதற்காக அல்ல. மாறாக அதற்கு துணையாக செயல்படும் கூடுதல் உணவு ஆதாரமாகவே அமையும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் தடைகள், எரிசக்தித் துறை சார்ந்த அழுத்தங்கள் மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் ஆகியவை விவசாயத் துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி வருவதாக மாட் சாபு குறிப்பிட்டார்.

இத்தகைய காரணிகள் விவசாய உற்பத்தித் திறனைப் பாதிப்பதுடன், உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகளையும் அதிகரிக்கின்றன. இதன் தாக்கம் இறுதியில் குடும்பங்களின் உணவுச் செலவு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது என்று அவர் கூறினார்.

மிளகாய், கத்திரிக்காய் மற்றும் வெங்காயத்தாள் போன்ற பயிர்களை வீடுகளில் பயிரிடுவதன் மூலம் நாட்டின் உள்நாட்டு உணவு விநியோகத்தை அதிகரிப்பதற்கான கூடுதல் நடவடிக்கையாக அமையும் என்றும் அவர் விளக்கியிருந்தார்.

எனினும், அவரது இந்த அழைப்பு பொதுமக்களிடையே சில விமர்சனங்களை எதிர்கொண்டது.

அதற்குப் பதிலளித்த மாட் சாபு, வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைகளைக் கொண்ட சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள்கூட நகர்ப்புற விவசாயம் உள்ளிட்ட வீட்டுத் தோட்டப் பயிர் நடவடிக்கையைத் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.