WCE நெடுஞ்சாலை : லாரி ஓட்டுநர்களின் நேரம் , எரிபொருள் மிச்சம்

4 செப்டெம்பர் 2026, 7:49 AM
WCE நெடுஞ்சாலை :  லாரி ஓட்டுநர்களின் நேரம் , எரிபொருள் மிச்சம்
WCE நெடுஞ்சாலை :  லாரி ஓட்டுநர்களின் நேரம் , எரிபொருள் மிச்சம்

கிள்ளான்,செப்டம்பர் 4 - மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையைப் (WCE) பயன்படுத்துவதின் வாயிலாக , தொழில்துறை பகுதிகள் மற்றும் முக்கிய துறைமுகங்களைச் சென்றடைவதற்கான பயணத் தூரமும் நேரமும் குறைந்திருப்பதாகப் பெரும்பாலான லாரி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நெடுஞ்சாலை நேராகவும், மலைப்பாங்கான சரிவுகள் குறைவாகவும் இருப்பதால், இது எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதோடு, சிலாங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சரக்குப் போக்குவரத்தை மேலும் சுமூகமாக்கியுள்ளது.

தொழில்துறை பகுதிகளுக்கும் துறைமுகங்களுக்கும் இடையே கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை ஒரு சிறந்த மாற்றுப் பாதையாக அமைந்துள்ளது என சிடி கேம்ப்பெல் நிறுவனத்தின் லாரி ஓட்டுநரான லோகன் ஷர்மா பரமசிவம் ( வயது 29) தெரிவித்தார்.

சிடி கேம்ப்பெல் நிறுவனத்தின் லாரி ஓட்டுநர் லோகன் ஷர்மா பரமசிவம் ( வயது 29) படம் : மீடியா சிலாங்கூர்

மாற்றுப் பாதையைப் பயன்படுத்தும்போது தொழில்துறை பகுதிகள், தளவாட மையங்கள் மற்றும் துறைமுகங்கள் என அனைத்தும் மிகவும் அருகாமையில் இருப்பது போன்ற உணர்வைத் தருவதால் இது தங்களுக்கு மிகுந்த வசதியை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தச் சாலை, நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மற்ற சாலைகளுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு மாற்றுப் பாதையாகவும் விளங்குகிறது. அதோடு இதன் நேரான சாலை பயணத்தை மிகவும் சீராக மாற்றியுள்ளது.

இதன் மூலம் துறைமுகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை பகுதிகள் உள்ளிட்ட இலக்குகளைத், தாங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மிக விரைவாகச் சென்றடைய முடிகிறது என்றும் லோகன் கூறினார்.

அண்மையில் சிஜங்காங் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் ஓய்வெடுக்கும் பகுதியில் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே , புல்லர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் லாரி ஓட்டுநரான முகமது யாசி அஜிசான் ( வயது 32 ) , மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் வடிவமைப்பு கனரக வாகனங்களுக்குப் பெரும் சாதகமாக உள்ளது எனத் தெரிவித்தார்.

புல்லர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் லாரி ஓட்டுநர் முகமது யாசி அஜிசான் ( வயது 32 ) படம் : மீடியா சிலாங்கூர்

ஏனெனில் , இதில் மலைப்பாங்கான சரிவுகளும் வளைவுகளும் குறைவாக இருப்பதால் லாரிகளில் அடிக்கடி பிரேக் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.

இந்த புதிய நெடுஞ்சாலையின் மற்றொரு முக்கிய நன்மை அதன் குறுகிய தூரமாகும் என்றும், இது ஓட்டுநர்கள் தங்களது இலக்குகளை மிகவும் திறம்பட மற்றும் எளிதாகச் சென்றடைய உதவுகிறது என்றும் அவர் விளக்கினார்.

இதனிடையே, யூர்ன் சூன் போக்குவரத்து நிறுவனத்தின் லாரி ஓட்டுநரான ரோஹிமி ஜவாஹிர் ( வயது 59 ) , மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை, கிள்ளான் துறைமுகத்தில் உள்ள வட துறைமுகத்திற்கும் தெற்கு சிலாங்கூருக்கும் இடையே பயணிப்பதற்கான ஒரு குறுக்குவழியாக மாறியுள்ளது என குறிப்பிட்டார்.

யூர்ன் சூன் போக்குவரத்து நிறுவனத்தின் லாரி ஓட்டுநர் ரோஹிமி ஜவாஹிர் ( வயது 59 ) படம் : மீடியா சிலாங்கூர்

வழக்கமாக இந்தச் சாலையை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தும் அவர், நேரத்தை மிச்சப்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், குறுகிய தூரப் பயணம் என்பது கணிசமான எரிபொருள் சேமிப்பைத் தருகிறது என்று கூறினார்.

அதே வேளையில், ஓட்டுநர்கள் சில குறிப்பிட்ட பகுதிகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் ரோஹிமி நினைவூட்டினார்.

குறிப்பாக பாதி அளவு திரவம் நிரப்பப்பட்ட டேங்கர் லாரிகளை ஓட்டும்போது, உள்ளே இருக்கும் திரவத்தின் அசைவு வாகனத்தின் நிலைத்தன்மையைப் பாதிக்கக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் ஓட்டுநர்களைக் கேட்டுக்கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.