சன்வே லகூன் ரோலர் கோஸ்டர் விபத்தில் அலட்சியம் அல்லது சதிவேலை குறித்து போலீசார் விசாரணை

27 ஆகஸ்ட் 2026, 8:10 AM
சன்வே லகூன் ரோலர் கோஸ்டர் விபத்தில் அலட்சியம் அல்லது சதிவேலை குறித்து போலீசார் விசாரணை

ஷா ஆலம், ஆகஸ்ட் 27 — சன்வே லகூன் பொழுதுபோக்கு பூங்காவில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) நிகழ்ந்த ரோலர் கோஸ்டர் விபத்தை, போலீசார் விரிவாக விசாரித்து வருகின்றனர்.

பாதுகாப்பு அலட்சியம் அல்லது சதிவேலை போன்ற கூறுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பெறுவதற்காக தீயணைப்பு, மீட்புத் துறை மற்றும் சிலாங்கூர் வேலையிட பாதுகாப்பு - ஆரோக்கியத் துறை உள்ளிட்ட பல அமைப்புகளுடன் இணைந்து இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

இன்று சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய அனைத்து தரப்பு கண்டுபிடிப்புகளும், குறுக்கு சோதனை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் அவர்கள் யாருக்கும் கடுமையான காயம் ஏற்படவில்லை என்றும், இதர பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் அல்லது வெளிநோயாளி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் ஷாசெலி மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, விசாரணை முடியும் வரை சன்வே லகூன் ரோலர் கோஸ்டர் சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அதன் இயற்பியல் கட்டமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையை விரிவாக ஆய்வு செய்ய குழுவிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த விசாரணைக்கு உதவும் வகையில் பொழுதுபோக்கு பூங்காவின் நடவடிக்கை ஊழியர்கள், சவாரி உதவியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பல சாட்சியாளர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பதிவுச் செய்துள்ளனர்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில் பொழுதுபோக்கு பூங்காவில் நிகழ்ந்த இந்த ரோலர் கோஸ்டர் விபத்தில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக சுபாங் ஜெயா போலீஸ் தலைமை அதிகாரி ஏசிபி வான் அஸ்லான் வான் மாமட் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.