ஷா ஆலாம், ஆகஸ்ட் 25 - கடந்த சனிக்கிழமை தனது கேளிக்கைப் பூங்காவில் 'ரோலர் கோஸ்டர் ' பழுதாகி 10 பேர் காயமடைந்த சம்பவத்தை சன்வே லகூன் ( Sunway Lagoon) உறுதிப்படுத்தியது.
"தற்போது அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதோடு, அச்சம்பவம் குறித்து முழு விசாரணை மேற்கொண்டிருக்கும் அனைத்து அதிகாரத்துவ தரப்புகளுடனும் நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம்." எனவும் அக்கேளிக்கை மைய நிர்வாகம் தெரிவித்தது.
இதனிடையே, ரோலர் கோஸ்டர் விபத்தை தமது தரப்பு கடுமையாகக் கருதுவதோடு, தனது கேளிக்கைப் பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு வசதிகளும் தொடர்ந்து உயர் பாதுகாப்புடன் இருப்பதையும் உறுதிச் செய்யுமெனவும் அம்மைய நிர்வாகம், அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டது

இவ்வேளையில், அந்த அசம்பாவிதம் தொடர்பில் சன்வே குழுமத்தின் நிறுவனர் டான் ஸ்ரீ ஜெஃப்ரி ஜியா, தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருப்பதாக நியூ ஸ்ட்ரேட் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
அதே வேளை, அச்சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான ஒரு விஷயமெனவும் அவர் கூறியிருந்தார்.
இரும்பின் தொடர் அழுத்தத்தால் ரோலர் கோஸ்டரில் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாமனெவும், சதி செயல் ஏதும் காரணமல்ல என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த ரோலர் கோஸ்டரை உட்படுத்திய விபத்தில் 10 பேர் காயமடைந்ததாக நேற்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் கூறியிருந்தார்.





