செப்பாங், ஆகஸ்ட் 22: சுக்மா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் அனைத்து அரங்குகளிலும் துப்புரவுப் பணிகளை அதிகரிப்பதற்காக கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் (KDEBWM) நிறுவனம் கூடுதலாக 2 லட்சத்து 40,000 ரிங்கிட் தொகையை ஒதுக்கியுள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டியின் அதிகாரப்பூர்வ ஆதரவாளர் என்ற முறையில், கூடுதல் பணியாளர்கள், குப்பைத் தொட்டிகள் மற்றும் கழிவுச் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கழிவு நிர்வகிப்பு பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுவதாக KDEBWM நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முகமட் தாஹிர் தெரிவித்தார்.
"ஊராட்சி மன்றங்கள் (PBT), நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் (GLC) இணைந்து செயல்படும் அனைத்து இடங்களிலும் எந்தவொரு சிக்கலும் இல்லை.
எனினும், நாங்கள் பணியாளர்கள், குப்பைத் தொட்டிகள் மற்றும் கழிவுச் சேகரிப்புப் பணிகளை அதிகரிக்க வேண்டியிருந்தது.
"இருப்பினும் பரவாயில்லை, ஏனெனில் நாம் கடைசியாக சுக்மா போட்டியை நடத்தியது 28 ஆண்டுகளுக்கு முன்பாகும். ஆகவே, இந்த விளையாட்டு அரங்குகள் அனைத்தும் தூய்மையாக இருப்பதை உறுதிச் செய்ய மாநில அரசுடன் இணைந்து செயல்படுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என டத்தோ ரம்லி இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பண்டார் செரேனியாவில் மாநில சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் தொடக்கி வைத்த சிலாங்கூர் மறுசுழற்சி (SELKitar Walk) நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தக் கூடுதல் ஒதுக்கீட்டின் மூலம், செலாயாங் அரங்கம் (Stadium Selayang) மற்றும் சிலாங்கூர் நீர்விளையாட்டு மையம் (Akuatik Selangor) உட்பட மக்கள் அதிகம் கூடும் முக்கிய விளையாட்டு அரங்குகளில் பல்வேறு கூடுதல் தேவைகளை KDEBWM வழங்கியுள்ளது என்று ரம்லி விளக்கினார்.
விளையாட்டு அரங்குகளில் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுபவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வரும் அதிகாரிகளின் கடுமையான நடவடிக்கைகளையும், துப்புரவுப் பணிகள் சீராக நடைபெற உதவிய பார்வையாளர்களின் நற்பண்புகளையும் அவர் பாராட்டினார்.
"விளையாட்டு அரங்குகளில் தங்களுக்குத் தோன்றியபடி புகைபிடிக்கும் பார்வையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் பெரும்பாலான இடங்களில் கூடுதல் குப்பைத் தொட்டிகளையும் வைத்துள்ளோம்."மேலும், பொதுமக்கள் அங்குள்ள தன்னார்வலர்களைப் பார்த்து விழிப்புணர்வு அடைந்து, குப்பைகளை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே போடுகின்றனர். அனைத்தும் மிகவும் நேர்த்தியாகக் காட்சியளிக்கின்றன," என்று அவர் கூறினார்.
சுக்மா விளையாட்டுப் போட்டிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், வரும் திங்கட்கிழமை இறுதி நாள் வரை பல போட்டிகள் நடத்தப்படவுள்ளன.







