பண்டான் இண்டா பகுதியில் திடீர் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வாக வடிகால் மேம்பாட்டு திட்டம்

6 மே 2026, 7:11 AM
பண்டான் இண்டா பகுதியில் திடீர் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வாக வடிகால் மேம்பாட்டு திட்டம்

ஷா ஆலம், மே 6: பண்டான் இண்டா பகுதியில் அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளப் பிரச்சனைக்கு நீண்ட கால தீர்வாக, அப்பகுதியிலுள்ள வடிகால்களை மேம்படுத்த அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) முடிவு செய்துள்ளது.

நீரோட்டத் திறனை அதிகரித்து, மழைக்காலங்களில் வெள்ள அபாயத்தைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

நகராண்மை கழகத்தின் பொறியியல் துறையினரால் மேற்கொள்ளப்படவுள்ள இந்த மேம்பாட்டுப் பணிகள், ஜாலான் 6/1 மற்றும் ஜாலான் 6/6 முதல் மெர்பாத்தி ஏ (Merpati A) அடுக்குமாடி குடியிருப்புகள் வரை தொடங்கி, அருகிலுள்ள ஆறு வரை நீட்டிக்கப்படவுள்ளன.

ஜாலான் பண்டான் இண்டா மற்றும் ஜாலான் பண்டான் மக்மூர் பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ள பாதிப்புகளைக் களைவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நகராண்மை கழகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

வெள்ளத்திற்கான மூல காரணத்தைக் கண்டறியும் பொருட்டு, நகராண்மை கழகத்தின் நகரச் சேவை மற்றும் சுகாதாரத் துறை மற்றும் பொறியியல் துறையினர் நேற்று சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின் போது, பிரதான வடிகாலின் (Monsoon drain) கான்கிரீட் கட்டமைப்பு விரிசல் அடைந்து கால்வாய்க்குள் சரிந்து விழுந்துள்ளதும், அது நீரோட்டத்தைத் தடுத்து வருவதும் கண்டறியப்பட்டது.

மேலும், சாலையோர வடிகால்களில் மணல் மற்றும் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் முறையாக வெளியேற முடியாமல் தேங்குவதும் உறுதி செய்யப்பட்டது.

இந்தப் பிரச்சனையை உடனடியாகச் சீர்செய்யும் வகையில், குறிப்பாகக் கடைகள் மற்றும் பிரதான சாலைகளுக்கு அருகிலுள்ள வடிகால்களைச் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள 'கேடிஇபி' (KDEB Waste Management) நிறுவனத்திற்கு நகராண்மை கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் வெள்ளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என நகராண்மை கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.