செப்பாங், ஆகஸ்ட் 22 : SELKitar எனப்படும் சிலாங்கூர் மறுசுழற்சித் திட்டம் கடந்தாண்டு அறிமுகம் கண்டதில் இருந்து, 63 லட்சம் கிலோகிராமுக்கும் அதிகமான கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டன.
சிலாங்கூரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 3 லட்சத்து 80,000-க்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து அந்த கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
அந்த எண்ணிக்கை, கழிவுகளைப் பிரித்தெடுப்பதில் சமூகத்தின் நல்ல மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக சுற்றுச்சூழல் மீதான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் தெரிவித்தார்.
"இதுவரை சிலாங்கூர் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட 4 லட்சம் வீடுகளை உள்ளடக்கி 63 லட்சம் கிலோவிற்கும் அதிகமான கழிவுகளை நாங்கள் சேகரித்துள்ளோம். இந்த எண்ணிக்கை எங்களது கடப்பாட்டினை காட்டுகிறது. "இதைவிடவும் அதிகமான சேகரிப்பை எங்களால் பெற முடியும் என்று நான் நம்புகிறேன்.
ஆனால், இந்தத் திட்டம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளதால், இதனை வெற்றியடைய சமூகத்தின் விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது. இனிவரும் காலங்களில், கழிவு சேகரிப்புடன் பொதுமக்களின் விழிப்புணர்வும் உயர்வாக இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்," என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
முன்னதாக, அவர் இங்குள்ள பண்டார் செரேனியாவில் 'செல்கிதார் வாக்' (SELKitar Walk) நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் 'கேடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் '(KDEB Waste Management ) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முகமட் தாஹிரும் கலந்து கொண்டார்.
அந்தத் திட்டத்தின் போது, அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் செல்கிதார் (SELKitar) முன்முயற்சியை மேம்படுத்துவதற்காக ஜமாலியாவும் ரம்லியும் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று மக்களைச் சந்தித்தனர்.

.இதற்கிடையில், மாநில அரசு அடுத்தாண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை உள்ளடக்கிய செல்கிதார் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தை விரிவுபடுத்த இலக்கு கொண்டுள்ளது என்று ஜமாலியா கூறினார்.
ஊராட்சித் தரப்புகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கூட்டு மேலாண்மை அமைப்பைக் (JMB) கொண்டுள்ளதால், இந்த பரிந்துரை விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அவர் விளக்கினார்.
"முதல் கட்டத்தைப் பொறுத்தவரை, நாங்கள் ஒரு மறுஆய்வை மேற்கொள்வோம். பின்னர் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற பகுதிகளில் இந்தத் திட்டத்தை எவ்வாறு வெற்றிகரமாகச் செயல்படுத்துவது என்பது குறித்து அடுத்த கட்டத்திற்கு நகர்வோம்.
"அதற்கு அந்தப் பகுதி சமூகத்தின் உதவி தேவைப்படுகிறது. இந்த முயற்சி மிகவும் முக்கியமானது, மேலும் முதலாவது, இரண்டாவது சிலாங்கூர் திட்டங்களின் கீழ் உள்ள முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் (KPI) இதுவும் ஒன்று என்பதால் நாங்கள் இதைத் தொடர்ந்து முன்னெடுப்போம்," என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மாநில அரசு, அமலாக்க தரப்பாக செயல்படும் KDEBWM மூலமாக 'செல்கிதார்' திட்டத்தைத் தொடங்கியது.
நெஸ்லே மலேசியாவுடனான (Nestle Malaysia) இந்த கூட்டு முயற்சி, சுபாங் ஜெயா மாநகராட்சி (MBSJ) மற்றும் சிப்பாங் நகராட்சி (MPSepang) ஆகியவற்றில் உள்ள சில குடியிருப்புப் பகுதிகளில் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது.








