ஷா ஆலம், ஜன 9: கடந்த திங்கள் அன்று சிலாங்கூர் மறுசுழற்சி திட்டம் (SELKitar) உலு சிலாங்கூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 47 குடியிருப்புப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (MPHS) தெரிவித்துள்ளது.
மாநில அரசு ஏற்பாடு செய்த இந்த திட்டம், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மாசுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஆரம்பத்திலேயே கழிவுகளைப் பிரிப்பதில் கவனம் செலுத்துவதாகவும், இதனால் அவை குப்பைக் கிடங்குகளில் சேருவது தடுக்கப்படுகின்றன என்றும் நகராண்மை கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
"வீட்டுக்கு வீடு சேகரிக்கும் திட்டம் பிளாஸ்டிக், காகிதம், அட்டை, பான அட்டைப் பெட்டிகள் மற்றும் உலோகம் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சேகரிக்கும்," என்றுமுகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை செயல்படுத்துவது குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் திடக்கழிவுகளின் அளவைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், சமூக மட்டத்தில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கிறது என உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்தது.
இது சம்பந்தமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் நிலையான சூழலை உருவாக்குவதற்காக மறுசுழற்சி செய்வதை தினசரி வழக்கமாக்குவதன் மூலம் தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
"நிலையான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சேகரிப்பு தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கு முன்பு, கழிவுகளை வகைப்படி பிரிக்க குடியிருப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்" என்று எம்பிஎச்எஸ் தெரிவித்துள்ளது.


