
ஷா ஆலாம், ஆகஸ்ட் 21 - 2026 சுக்மா காற்பந்து போட்டியின் இறுதியாட்டத்தை நேரலையாக ஒளிபரப்புச் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அதன் தொடர்பில், தொலைத் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில்-உடன் பேசப்பட்டு வருகிறது. அவ்விவகாரத்தை விளையாட்டுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மொஹ்ட் நஜ்வான் ஹலிமி ஒருங்கிணைத்து வருவதாக, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.
சுக்மா காற்பந்து இறுதியாட்டத்தைக் காண அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளது. விளையாட்டரங்கில் 15,000 இருந்து 16,000 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும். தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு இருந்தால் , அதிகமானோர் அவ்வாட்டத்தைக் கண்டு களிக்க முடியுமென அமிரூடின் ஷாரி கூறினார்.
காற்பந்தின் இறுதியாட்டத்துக்கு சிலாங்கூர் முன்னேறியிருப்பதால், அவ்வாட்டம் அதிகமான ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார் .
இன்று இங்கு 2026 சுக்மா அணிகளின் தலைவர்களுடன் பசியாறியப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாளை பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக அரங்கில் நடைபெறும் சுக்மா காற்பந்து இறுதியாட்டத்தில் சிலாங்கூர் ஜொகூருடன் மோதுகிறது.







