
செலாயாங், ஆகஸ்ட் 20 - சுக்மா 2026 மகளிர் காற்பந்து இறுதிப்போட்டியில் சபா அணியை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தி சிலாங்கூர் அணி தங்கம் வென்றது.
செலாயாங் நகராட்சி மன்ற அரங்கில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில், இரு அணிகளும் தொடக்கம் முதலே தீவிரமாக ஒன்றுகொன்று தாக்கியே ஆடினாலும் சிலாங்கூர் அணியே ஆதிக்கம் செலுத்தியது.

அரங்கில் திரண்டிருந்த சுமார் 5,000 சிலாங்கூர் ஆதரவாளர்களின் முன்னிலையில், ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் சபாவின் தற்காப்பு ஆட்டக்காரர் செய்த தவற்றைச் சாதகமாக்கி, எஸ். திஷாவனி கொடுத்த பந்தைக் கொண்டு சிலாங்கூர் முன்கள ஆட்டக்காரர் தேகன் சு யின் பட்லர் ( Tegen Su Yin Butler) முதல் கோலை அடித்தார்.

பிற்பாதியில், தேசிய வீராங்கனைகளைக் கொண்ட சபா அணி சிலாங்கூரின் கோல் பகுதியைத் தாக்கினாலும் சிலாங்கூர் அணி நிதானமாகச் செயல்பட்டு எதிர்த்தாக்குதல்களை நடத்தியது.

அதன் பலனாக, ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் தேகன் சு யின் பட்லர் மீண்டும் ஒரு சிறப்பான கோல் அடித்து சிலாங்கூரின் வெற்றியை 2-0 என உறுதிச் செய்தார்.

சிலாங்கூரின் இந்த வெற்றியை அடுத்து சபா அணி வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.










