
ஷா ஆலாம், ஆகஸ்ட் 20 - 2026 சுக்மாவில் சிலாங்கூர் மாநிலத்திற்கு அதிகமான பதக்கங்களை வாரி இறைத்த விளையாட்டாக நீச்சல் போட்டி திகழ்கிறது.
குறிப்பாக பதக்கங்களோடு சாதனைகளும் இந்த விளையாட்டில் படைக்கப்பட்டன.
அதில் 19 வயதான எலிசா டான் ஆய் ஷென் (Eliza Tan Ai Shen), பெண்களுக்கான 100 மீட்டர் ஃபிரீஸ்டைல் (Free Style) பிரிவில் இரு முறை தேசிய சாதனையை முறியடித்து சாதனைப் படைத்துள்ளார்.
அவர் 56.78 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதற்கு முன்பு, தகுதிச் சுற்றில் அவர் 57.03 வினாடிகளில் இலக்கை அடைந்து, நாடியா லிம்மின் (Nadia Lim) முந்தைய தேசிய சாதனையான 57.11 வினாடிகளை முறியடித்திருந்தார்.
அதோடு நேற்று, அவர் பெண்களுக்கான 200 மீட்டர் ஃபிரீஸ்டைல் பிரிவிலும் சிலாங்கூர் மாநிலத்திற்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருந்தார்.
பௌலிங் போட்டியிலும் சிலாங்கூர் அணிக்கு தங்கம் கிடைத்தது. பெண்களுக்கான த்ரியோ (trio) பிரிவில் குர்ராது ஐன் இஸ்திஹார் முகமட் போசி (Qurratu’ Ain Izdihar Mohd Pozi), அடேலியா நூர் இர்வான் சசாலி ( Adelia Nur Irwan Syazalee) மற்றும் அடானியா முகமட் ரெட்ஸ்வான் (Adania Mohd Redzwan) ஆகியோர் இணைந்து இந்தத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தனர்.

மேலும், சிலாங்கூர் மகளிர் பூப்பந்து அணி, பினாங்கு அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது.

ஆடவர் ஃபூட்சல் (futsal) போட்டியிலும் சிலாங்கூர் அணி பினாங்கை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தனது தங்கப் பதக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டது.




