டிங்கி சம்பவங்கள் 56 % உயர்வு : சிலாங்கூரிலே அதிக பாதிப்பு

21 ஆகஸ்ட் 2026, 5:57 AM
டிங்கி சம்பவங்கள்  56 % உயர்வு : சிலாங்கூரிலே அதிக பாதிப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 - மலேசியாவில் டெங்கி காய்ச்சல் பாதிப்பு 56.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதில் சிலாங்கூர் மாநிலமே மிக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

2026-ஆம் ஆண்டின் 32-ஆவது தொற்றுநோயியல் வாரம் வரை நாடு முழுவதும் மொத்தம் 58,079 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 56.2 விழுக்காடு உயர்வாகும். மேலும், டெங்கி பாதிப்பினால் 55 மரணங்களும் இந்த காலகட்டத்தில் பதிவாகின.

பாதிப்பு அதிகரிப்பு ஆரம்பத்தில் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா உள்ளிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிகமாகக் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சு தீவிரமான , இலக்கு வைக்கப்பட்ட தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்த தீவிர நடவடிக்கைகள் கிள்ளான் பள்ளத்தாக்கில் நேர்மறையான மாற்றங்களைக் காட்டத் தொடங்கியுள்ளன.

இருப்பினும், தேசிய அளவில் டெங்கி பரவும் அபாயம் இன்னும் கவலைக்குரியதாகவே உள்ளது.

ஏனெனில் இப்போது மற்ற மாநிலங்களிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 15 வரையிலான மாநில வாரியான ஒப்பீட்டின்படி, பெர்லிஸ் மாநிலம் அதிகபட்சமாக 207 விழுக்காடு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது (கடந்த ஆண்டு 55 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 169 சம்பவங்கள்).

இதனைத் தொடர்ந்து ஜொகூர் 109 விழுக்காடு அதிகரித்து 8,639 சம்பவங்களையுன், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா 106 விழுக்காடு அதிகரித்து 10,316 சம்பவங்களையும் பதிவு செய்துள்ளன.

சிலாங்கூர் மாநிலம் மிக உயர்ந்த எண்ணிக்கையாக 25,090 சம்பங்களைப் பதிவு செய்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட (15,610 சம்பவங்கள்) 61 விழுக்காடு கூடுதலாகும்.

ஏடிஸ் கொசு புழுக்கள் படம் - மீடியா சிலாங்கூர்

லாபுவான் (86%), திராங்கானு (70%), பேராக் (43%), நெகிரி செம்பிலான் (42%), சபா (34%), சரவாக் (33%), பகாங் (11%) மற்றும் கிளாந்தான் (10%) ஆகிய மாநிலங்களிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

இருப்பினும், மூன்று மாநிலங்களில் டெங்கி சம்பவங்கள் குறைந்துள்ளன. பினாங்கு 26 விழுக்காடு குறைந்து 916 சம்பவங்களையும், மலாக்கா 36 விழுக்காடு குறைந்து 477 சம்பவங்களையும், கெடா 60 விழுக்காடு குறைந்து 599 சம்பவங்களையும் பதிவு செய்துள்ளன.

மாறிவரும் வானிலை, அதாவது மழையும் வெயிலும் மாறி மாறி வருவது ஏடிஸ் (Aedes) கொசுக்கள் பெருகுவதற்கு சாதகமான சூழலை உருவாக்குவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், குடியிருப்புப் பகுதிகளில் முறையாகப் பராமரிக்கப்படாத, தண்ணீர் தேங்கும் கொள்கலன்கள் இதற்கு முக்கிய காரணமாகும்.

ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமானவை குடியிருப்புப் பகுதிகளிலேயே கண்டறியப்படுவதால், பொதுமக்கள் வாரத்திற்கு 10 நிமிடங்கள் ஒதுக்கி தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோதித்து சுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காய்ச்சல் அல்லது டெங்கி அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.