புத்ராஜெயா,ஜூலை 10 : நாடு முழுவதும் டிங்கிக் காய்ச்சல் பாதிப்பு 34.8 விழுக்காடு அதிகரித்து நேற்று வரை 42,848 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது 2025-ஆம் ஆண்டின் இதே கால கட்டத்தில் பதிவான 31,790 சம்பங்களுடன் ஒப்பிடும்போது புதிய உயர்வாகும்.
மேலும், டிங்கிக் காய்ச்சலால் ஏற்பட்டிருக்கும் மரணங்களின் எண்ணிக்கை 78.9 விழுக்காடு அதிகரித்து 34-ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 19 மரணங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன.
அதோடு, மலேசியாவின் மொத்த டிங்கிக் காய்ச்சல் சம்பவங்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு அல்லது 63.5 விழுக்காடு சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளது.
இதில் சிலாங்கூர் மாநிலம் 19,313 சம்பங்களைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடும்போது 43.2 விழுக்காடு உயர்வாகும்.
கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகள் 7,909 டிங்கிக் காய்ச்சல் சம்பங்களைப் பதிவு செய்துள்ளன, இது கடந்த ஆண்டை விட 83.8 விழுக்காடு உயர்வாகும்.
ஜொகூர், சபா, நெகிரி செம்பிலான், பேராக், சரவாக், பெர்லிஸ், திரெங்கானு மற்றும் லபுவான் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
எனினும், கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலே அதிகமாக டிங்கி பரவல் ஏற்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்தது.







