ஷா ஆலம், டிச 2: சிலாங்கூரில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் நவம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் சிறிது குறைந்துள்ளன. எனினும் மழைக்காலத்தில், குறிப்பாக ஹாட்ஸ்பாட் பகுதிகளில், தொற்றுப் பரவலின் அபாயம் இன்னும் அதிகமாக உள்ளது.
கடந்த 16 முதல் 22 நவம்பர் வரை 385 டிங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரம் பதிவான 403 சம்பவங்களுடன் ஒப்பிடும் போது 18 சம்பவங்கள் குறைவாகும் என பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
எனினும், தொடர்ச்சியான மழை, ஏடிஸ் கொசுகள் அதிகளவில் பெருகுவதற்கும், குறிப்பாக மக்கள் தொகை அதிகமாக உள்ள பகுதிகளில் டிங்கி தொற்று அபாயத்தை அதிகரிப்பதற்கும் காரணமாக அமையும் என்றார்.
“இதனால், சிலாங்கூர் குடிமக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும், சமூகத்தையும் டிங்கி தொற்றிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கவனமாக மேற்கொள்ள கேட்டு கொள்கிறேன்,” என்று ஜமாலியா மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் தீவிர நோயாளிகள் மீது அதிக கவனம் செலுத்துமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார். ஏனெனில், அவர்கள் டிங்கி தொற்றின் மூலம் கடுமையான பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.
“எனவே, நீண்டநாள் காய்ச்சல் அல்லது சந்தேகமான மற்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கிளினிக் அல்லது மருத்துவமனையில் பரிசோதனை செய்யுங்கள். ஆரம்ப பரிசோதனை உயிரைக் காக்க உதவும்,” என்றார்.


