3 பேர் பலியான விபத்து:குடிநுழைவுத் துறை ஓட்டுநர் மீது 5 குற்றச்சாட்டுகள்

20 ஆகஸ்ட் 2026, 7:55 AM
3 பேர் பலியான விபத்து:குடிநுழைவுத்  துறை ஓட்டுநர் மீது 5 குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - குடிநுழைவுத் துறையின் பிளாக் மரியா' லாரி ஓட்டுநர் மீது, ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி மூவருக்கு மரணத்தை விளைவித்தது உட்பட ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 43 வயது மொஹமட் அக்பார் சய்னோல் , அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார்.

முதல் மூன்று குற்றச்சாட்டுகளின்படி, ஆகஸ்ட் 19 நள்ளிரவு ஒரு மணியளவில், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் இசுசூ பிளாக் மரியா லாரியை ஆபத்தான முறையில் ஓட்டி, 53 வயதான ஷேக் முகமது பிர்தாஸ் ஷேக் யஹ்யா மற்றும் அவரது இரு மகள்களான 24 வயது சிதி நோர்ஷாஸ்லின், 12 வயது சிதி தர்விஸ்யா அவ்னி ஆகியோருக்கு மரணத்தை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இக்குற்றச்சாட்டுகள் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் செக்க்ஷன் 41 (1) பிரிவின் கீழ் வாசிக்கப்பட்டன.

இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் இருபதாயிரம் ரிங்கிட் மற்றும் அதிகபட்சம் ஐம்பதாயிரம் ரிங்கிட் அபராதமும், அத்துடன் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பதற்கான தகுதி நீக்கமும் விதிக்கப்படலாம்.

நான்காவது குற்றச்சாட்டின்படி, அதே இடம், நேரம் மற்றும் தேதியில், போதிய கவனமும் எச்சரிக்கையும் இன்றி வாகனத்தை ஓட்டி, ஷேக் முகமது பிர்தாஸின் மனைவியான 55 வயது நோர் ஹயாதி ரோசாலிக்கு காயம் ஏற்படுத்தியதாக முகமது அக்பர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இக்குற்றச்சாட்டு அதே சட்டத்தின் செக்க்ஷன் 43( 1) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஐயாயிரம் ரிங்கிட் மற்றும் அதிகபட்சம் பத்தாயிரம் ரிங்கிட் அபராதமும், 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்க வாய்ப்புள்ளது.

ஐந்தாவது குற்றச்சாட்டில், அதே நேரம் மற்றும் தேதியில், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சந்திப்பில் சிவப்பு விளக்கு சமிக்ஞையை மீறி, போக்குவரத்து விதியை மதிக்கத் தவறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு அதே சட்டத்தின் செக்க்ஷன் 79 ( 2) பிரிவின் கீழ் வாசிக்கப்பட்டது.

இந்த குற்றத்திற்கு 300 ரிங்கிட் முதல் ஈராயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்க முடியும்.

மஜிஸ்திரேட் அலியா அன்வார், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 12,000 ரிங்கிட் உத்தரவாதத் தொகையை அனுமதித்தார்.

மேலும், ஒவ்வொரு மாதமும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் வழக்கு முடியும் வரை ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்ற கூடுதல் நிபந்தனைகளை விதித்தார்.

நேற்று , சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கைகாக சௌ கிட் ( Chow Kit) நோக்கிச் சென்று கொண்டிருந்த குடிநுழைவுத் துறையின் பிளாக் மரியா லாரி , சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறி சென்றதால் ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாதசாரிகள் உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.