சிவப்பு சமிக்ஞையை மீறிய குடிநுழைவுத் துறையின் லாரி : 3 பாதசாரிகள் உயிரிழப்பு

19 ஆகஸ்ட் 2026, 3:23 AM
சிவப்பு சமிக்ஞையை மீறிய குடிநுழைவுத் துறையின் லாரி :  3 பாதசாரிகள்  உயிரிழப்பு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் , மாஜூ ஜங்சன் ( Maju JUnction ) சாலை சந்திப்பின் சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறியதால் ஏற்பட்ட விபத்தில் , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இன்று அதிகாலை மணி 1 வாக்கில் நிகழ்ந்த அந்த கோர விபத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மலேசிய குடிநுழைவுத் துறையின் லாரி மோதியது.

சம்பவத்தின் போது, காலியாக இருந்த இசுசூ 'பிளெக் மரியா' ( Isuzu'Black Maria') லாரி, கள்ளக் குடியேறிகள் தொடர்பான நடவடிக்கைக்காக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை அலுவலகத்தில் இருந்து சாவ் கிட் ( Chow Kit) நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

தொடக்க விசாரணையில், 43 வயது உள்நாட்டு ஆடவர் செலுத்திய அந்த லாரி, சமிக்ஞை விளக்கு சிவப்பில் இருக்கும்போது சாலை சந்திப்புக்குள் நுழைந்ததாக, போக்குவரத்து புலனாய்வு- அமலாக்கத் துறையின் தலைவர் ஏசிபி மொஹமட் சம்சூரி மொஹ்மட் இசா தெரிவித்தார்.

அதே நேரத்தில், பச்சை நிறத்தில் இருந்த சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் இருந்து நுழைந்த புரோட்டோன் சாகா கார் , அந்த லாரியைத் தவிர்க்க முடிய்யாமல் மோத நேரிட்டது.

அந்த மோதலினால், கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட லாரி , அவ்வழியே சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பாதசாரிகளை மோதித் தள்ளியதோடு, மேலுமொரு வாகனமான இனோகோம் மெட்ரிக்ஸ் காருடன் விபத்தில் சிக்கியது.

அதில் 53 வயது ஆடவர், 25, 12 வயதுடைய அவரது இரு மகள்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த நபரின் 55 வயதான மனைவிக்கு தலை, கை, இரு கால்களில் காயங்கள் ஏற்பட்டன. அவர் கோலாலம்பூர் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவத்தில் சிக்கிய வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்தை அடுத்து குடிநுழைவுத் துறையின் லாரி ஓட்டுநரும் புரோட்டோன் சாகா ஓட்டுநரும் , விசாரணைக்கு உதவ கைது செய்யப்பட்டதாக ஏசிபி மொஹமட் சம்சூரி தெரிவித்தார்.

மேலும் அந்த ஓட்டுநர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப் பொருளோ மதுவோ உட்கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.