கெந்திங் ஹைலேண்ட்ஸ், ஆகஸ்ட் 18: நேற்று பிற்பகல் கெந்திங் ஹைலேண்ட்ஸில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறும் மற்றும் உள்ளே வரும் அனைத்து முக்கிய சாலைகளிலும் போலீசார் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று சந்தேக நபர்களும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பகாங் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் தெரிவித்தார்.
ஆரம்பக்கட்ட விசாரணை மற்றும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்ததில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் மூன்று ஆடவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்.
இதனிடையே, கொள்ளைச் சம்பவத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளிகள் இன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
அவற்றில், சந்தேக நபர்கள் என நம்பப்படும் சிலர் வணிக வளாகத்தின் வழியாக தப்பிச் செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவலை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.
கொள்ளை எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான முழுமையான விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.







