புத்ராஜெயா, ஆகஸ்ட் 17 — மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அனைத்து விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனையை நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை செய்யப்பட்ட அனைவரின் முடிவுகளும் எதிர்மறையாக (நெகட்டிவ்) வந்துள்ளது .
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் பணிக்கான உடற்தகுதி நடவடிக்கைகளின் கீழ் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 15ஆம் தேதி காலக்கெடுவுக்குள் இந்தப் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

முதல் கட்டப் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் பிற செயல்பாட்டுப் பிரிவுகளிலும் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தலைமை நிர்வாக அதிகாரி நசாருடின் ஏ. பக்கார் தெரிவித்தார்.
விமானிகளுக்கான பரிசோதனை நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாளை முதல் 2,840 கேபின் பணியாளர்களுக்கான கட்டாய போதைப்பொருள் பரிசோதனை கட்டம் கட்டமாக தொடங்கப்படவுள்ளது.
இந்தப் பரிசோதனைகள் செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, Firefly-யின் விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்களுக்கும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, போதைப்பொருள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்கும் முற்றிலும் ஒழிப்பதற்கும் சீரற்ற முறையிலான போதைப்பொருள் பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நசாருடின் கூறினார்.






