ஷா ஆலாம், ஆகஸ்ட் 16 — கடந்த மாதம் இந்தோனேசியாவுக்குள் 26 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் மலேசிய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட விமானி 2024ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருளை கடத்திச் சென்றிருக்கலாம் என நம்பப்படுவதாகப் புக்கிட் அமானின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தாவில் அந்த விமானியிடம் NCID அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின்போது, இந்த புதிய தகவல்கள் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
“அந்த சந்தேக நபர் 2024ஆம் ஆண்டு முதல் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அவரது பணி, விமானப் பயண அட்டவணைக்கு ஏற்ப நாட்டிலிருந்து போதைப்பொருளை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதாக இருந்துள்ளது.

மேலும், மலேசியா மற்றும் இந்தோனேசியா உட்பட பல நாடுகளில் செயல்பட்டு வரும் போதைப்பொருள் கும்பல்கள் தொடர்பான முக்கியத் தகவல்களையும் அந்த விமானி வழங்கியுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கும்பல் உறுப்பினர்கள் மீது அரச மலேசியக் காவல்துறை (PDRM) விசாரணை மேற்கொள்ளும்.
சர்வதேச அளவில் செயல்படும் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பாக பெறப்பட்ட தகவல்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் அமலாக்க அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
தற்போது அந்த விமானி இந்தோனேசியவில் தடுப்பு காவலில் இருப்பதாகவும், இந்தோனேசிய சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு அவர் அந்நாட்டிலேயே நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் ஹுசைன் தெரிவித்தார்.






