மலேசியாவில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த சுகாதார அமைச்சு இலக்கு

13 ஜூன் 2026, 1:57 AM
மலேசியாவில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த சுகாதார அமைச்சு இலக்கு

கோலாலம்பூர், ஜூன் 13: நாட்டின் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டங்களை (Organ Transplant Agenda) மேலும் முற்போக்கான முறையில் முன்னெடுத்துச் செல்வதை சுகாதார அமைச்சு இலக்காகக் கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்துள்ளார். '

மைசெஜ்தேரா' (MySejahtera) செயலி வாயிலாக லட்சக்கணக்கான மலேசியர்கள் தங்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்து உறுதியளித்துள்ள போதிலும், மாற்று அறுவை சிகிச்சைக்காக இன்னும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் ஒரு அற்புதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை நீடித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் முறையில் நாம் செய்யும் இந்த உடல் உறுப்புத் தான உறுதிமொழி ஒரு புனிதமான வாக்குறுதியாகும். ஆனால், இது நமது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் மனப்பூர்வமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று என்று அவர் கூறினார்.

உடல் உறுப்புத் தானம் செய்ய விரும்புபவர்களின் உன்னதமான விருப்பத்தை மதிப்பதற்கும், தேவைப்படுபவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் சம்மதமும் மிக முக்கியக் காரணியாக விளங்குவதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளையில், பிறந்தது முதல் 'பிலியரி அட்ரேசியா' (Biliary Atresia) எனும் பித்தப்பை பாதிப்பு நோயுடன் போராடி வந்த முஹம்மது ராயிஃப் ரப்பானி என்ற சிறுவனுக்கு, துங்கு அஜிஸா மருத்துவமனையில் (Hospital Tunku Azizah) வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறித்து அவர் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.

சிறுவயதிலிருந்தே இந்த நோயுடன் தைரியமாகப் போராடி வந்த அச்சிறுவன், தற்போது குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சிறுவன் ராயிஃப் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து எதிர்காலத்தில் சமூகத்திற்குப் பங்களிக்க வேண்டும் என வாழ்த்தினார்.

இந்தச் சவாலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்த துங்கு அஜிஸா மருத்துவமனையின் நிபுணர்கள் குழுவிற்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். அதோடு, உடல் உறுப்புத் தானத்தின் மூலம் மற்றுமொரு நோயாளிக்கு மறுவாழ்வு தந்து, புதிய நம்பிக்கையை அளித்துள்ள உறுப்புத் தானம் செய்தவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சுல்கிப்ளி தனது மனமார்ந்த நன்றியைச் சமர்ப்பித்தார்.

மலேசிய மடாணி (Malaysia Madani) கொள்கையின் கீழ், நாட்டின் மருத்துவத் துறை அனைத்துத் தரப்பினரிடமும் கருணை மற்றும் நீதியின் அடிப்படையில் வழிநடத்தப்படுவதை உறுதி செய்யத் தங்கள் அமைச்சு என்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.