இஸ்தான்புல், அக் 27: தென் சீனக் கடலில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஒரு போர் விமானமும் ஒரு ஹெலிகாப்டர் தனித்தனியாக விபத்துக்குள்ளாகியுள்ளதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பசிபிக் கடற்படை தனது சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், Helicopter Maritime Strike Squadron 73 “Battle Cats” பிரிவில் பணியாற்றிய MH-60R Sea Hawk ஹெலிகாப்டர், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணியளவில் வழக்கமான பணியை மேற்கொண்டபோது கடலில் விழுந்ததாக கூறியுள்ளது. அந்த ஹெலிகாப்டரில் இருந்த மூன்று குழுவினரும் மீட்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
அதேபோல், Strike Fighter Squadron 22 “Fighting Redcocks” பிரிவில் பணியாற்றிய F/A-18F Super Hornet போர் விமானமும் வழக்கமான பணியின் போது விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த இரு விமானியும் வெளியேறும் இருக்கை முறையைப் பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேறி, Carrier Strike Group 11 மீட்பு குழுவினரால் காப்பாற்றப்பட்டனர்.
இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட அனைத்து குழுவினரும் பாதுகாப்பாகவும் நிலையான உடல்நிலையிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்துகளுக்கான காரணம் தற்போது விசாரணையில் உள்ளது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.




