ஷா ஆலாம், 14 ஆகஸ்ட் : இன்று தெமர்லோ-திரியாங் த்சாலை (Jalan Temerloh-Triang) கிலோமீட்டர் 9-இல், காரும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததில், காரில் பயணம் செய்த சிலர் தீயில் கருகி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
மாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், டேங்கர் லாரியில் 32,000 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றப்பட்டிருந்ததால், தீயை அணைத்து மீட்புப் பணிகள் நிறைவடைய நீண்ட நேரம் எடுத்தது.
பொது மக்களிடமிருந்து டேங்கர் லாரியும் காரும் தீப்பற்றி எரிவது குறித்து தகவல் கிடைத்ததாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர், அசிஸ்டெண்ட் கமிஷனர் மொஹமட் நசிம் பஹ்ரோன் (Mohd Nasyim Bahron) தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையின்படி, சிரம்பானில் இருந்து தெமர்லோ நோக்கி டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசைப் பாதைக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.
"அதே நேரத்தில், பெரோடுவா பெசா (Perodua Bezza) என நம்பப்படும் ஒரு கார், அந்த டேங்கர் லாரியின் பக்கவாட்டுப் பகுதியில் மோதியது."இந்த மோதலின் விளைவாக, இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன.
"லாரியை ஓட்டி வந்த 37 வயதுடைய நபர், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
காரின் ஓட்டுநரும் பயணிகளும் வாகனம் தீப்பற்றுவதற்கு முன்பு தப்பிக்க முடியாமல் போயிருக்கலாம் என்று மொஹமட் நசிம் கூறினார்.
இருப்பினும், கார் கடுமையாக நசுங்கியுள்ளதாலும், தீயை அணைக்கும் பணிக்கு நீண்ட நேரம் எடுத்ததாலும், பலியானவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் அவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
டேங்கர் லாரி ஓட்டுநர் மேல் விசாரணைக்காக கைது செய்யப்படுவார் என்றும், இந்த வழக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்ததற்கான சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.




