
சிப்பாங், ஆகஸ்ட் 14 : செப்பாங் மாவட்டத்தின் சில முக்கிய சாலைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) முதல் ஆகஸ்ட் 19 வரை படிப்படியாக மூடப்பட்டு , போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளன.
சுக்மா மலேசிய விளையாட்டுப் போட்டியின் நெடுஞ்சாலை சைக்கிள் பந்தயத்திற்கு (Highway cycling) வழி விடுவதற்காக, போக்குவரத்து திசை திருப்பப்படும்.
142 போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்த சைக்கிள் பந்தய வழித்தடங்களில் காலை 8:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை சாலை மூடப்படுமென செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் நூர்ஹிசாம் பஹாமான் (ACP Norhizam Bahaman) தெரிவித்தார்.
இந்த சைக்கிள் பந்தயத்தின் போது போக்குவரத்து கட்டுப்பாட்டு பணிகளுக்காக 96 பகுதிகள் கண்காணிக்கப்பட்டு, அவை நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்படவுள்ளன.
"அந்த நான்கு மண்டலங்கள்:
மண்டலம் ஏ (ஜாலான் பந்தாய் சிப்பாங் புத்ரா - தும்போக் எல்லை),
மண்டலம் பி (ஜாலான் டெங்கில் - ஜெண்டராம் ஹுலு),
மண்டலம் சி (ஜாலான் ஜெண்டராம் - சாலாக்) மற்றும்
மண்டலம் டி (ஜாலான் சாலாக் சிப்பாங் - சுங்கை பீலெக்)
ஆகும்" என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
மேலும், பெர்சியாரான் பந்தாய் சிப்பாங் புத்ரா, ஜாலான் கம்புங் பாகான் லாலாங், ஜாலான் புக்கிட் பாங்கோங் - தஞ்சோங் ரூ மற்றும் ஜாலான் தும்போக் செம்படான் ஆகிய சாலைகள் ஆகஸ்ட் 16,17, 19 ஆகிய தேதிகளில் மூடப்படும் என்று அவர் கூறினார்.
அதே வேளையில்,ஆகஸ்ட் 18 அன்று டெங்கில் நோக்கிச் செல்லும் ஜாலான் பந்திங் - செமினி, டெங்கில் நகரம், ஜாலான் ஜெண்டராம் ஹிலிர், ஜாலான் ஜெண்டராம் - சாலாக், பண்டார் பாரு சாலாக் திங்கி, ஜாலான் பெக்கான் சாலாக் - லெம்பா பாயா, ஜாலான் சிப்பாங் லாமா மற்றும் ஜாலான் சுங்கை பீலெக் உள்ளிட்ட இன்னும் பல முக்கிய வழித் தடங்கள் மூடப்படும் என்று அவர் விவரித்தார்.
பாதிக்கப்பட்ட சாலைகளின் சந்திப்புகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளில் செப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், உள்ளூர் நகராண்மைக் கழக அதிகாரிகள் , சிலாங்கூர் போலீஸ் தலைமையக போக்குவரத்து போலீசார் ஆகியோர் பணியமர்த்தப்பட்டு ரோந்து - கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்று நூர்ஹிசாம் தெரிவித்தார்.







